பக்கம் எண் :

51

இயற்கை. அஃது இறைவனைப் புகலாக அடைந்ததாற் கருடனை எளிமையாக
நோக்கி நலன் வினவியது.
‘ஏன் கருடா! சுகமா?' என்றால் ‘இருக்கும்
இடத்திலேயே யிருந்தாற் சுகம்'
என்று கூறுவது பழமொழி. பெரியோர்
நட்பு வேண்டும் என்பதாம்.

 

     45. புல்லரை அடுக்காதே

வடியிட்ட புல்லர்தமை அடுத்தாலும்
     விடுவதுண்டோ? மலிநீர்க் கங்கை
முடியிட்ட தண்டலைநா தரைப்புகழிற்
     பெருவாழ்வு முழுதும் உண்டாம்!
மிடியிட்ட வினைதீரும்! தெய்வமிட்டும்
     விடியாமல் வீணர் வாயிற்
படியிட்டு விடிவதுண்டோ? அவரருளே
     கண்ணாகப் பற்று வீரே!

      (தொ-ரை.) வடியிட்ட புல்லர்தமை அடுத்தாலும் விடுவது உண்டோ -
வடிகட்டிய அற்பர்களை அடைந்து வேண்டினும் உன் கவலை நீங்கிவிடுமோ?,
மலிநீர்க் கங்கை முடியிட்ட தண்டலை நாதரைப் புகழின்  முழுதும்  பெரு
வாழ்வு உண்டாம் - மிகுநீரான கங்கையை முடியிலே சேர்த்த தண்டலை
யிறைவரை வாழ்த்தினால் முற்றும் பெரிய ஆக்கம் கிடைக்கும், மிடியிட்ட
வினைதீரும் - வறுமையை ஊட்டும் ஊழ்வினை ஒழியும், தெய்வம் இட்டும்
விடியாமல் வீணர்  வாயில்  படியிட்டு  விடிவது  உண்டோ - தெய்வம்
கொடுத்தும் நீங்காத வறுமையானது புல்லரின் வாயிற்படியை அடைவதால்
நீங்கிவிடுமோ? (ஆகையால்),  அவர்  அருளே  கண்ஆகப்  பற்றுவீர் -
தண்டலை இறைவரின் திருவருளையே வழியாகப் பிடித்துக் கொள்வீர்.

      (வி-ரை.) வடியிட்ட புல்லர் - சிறிதும் நன்மையறியாத புல்லர்.
புல்லர்தமை : தம் : சாரியை.
‘வடியிட்ட படியிட்டு' என்பன மரபு மொழிகள்.
‘பனிபெய்து குளம் நிறையுமா?'
என்பது இங்குப் பொருந்தும் பழமொழி.