பக்கம் எண் :

54

48. மாரி பதின்கல நீரிற் கோடையில்
   ஒருகுடம் நீர் வண்மை

சீரிலகும் தண்டலையார் திருவருளால்
     அகமேறிச் செழித்த நாளில்,
பாரியென ஆயிரம்பேர்க் கன்னதா
     னம்கொடுக்கும் பலனைப் பார்க்க,
நேரிடும்பஞ் சந்தனிலே எவ்வளவா
     கிலும்கொடுத்தால் நீதி யாகும்
மாரிபதின் கலநீரிற் கோடைதனில்
     ஒருகுடம்நீர் வண்மை தானே.

      (தொ-ரை.) மாரி  பதின்கலம்  நீரில்  கோடைதனில்  ஒருகுடம்
நீர்வண்மை -  மழைக்காலத்திற்  பத்துக்கலம்  நீர்  கொடுப்பதினும்
வெயிற்காலத்தில்  ஒரு  குடம்  நீர்  அளிப்பதே  சிறந்த  கொடையாகும்.
(ஆகையால்), சீர் இலகும் தண்டலையார் திருவருளால் அகம்ஏறிச் செழித்த
நாளில் - அழகுற  விளங்கும்  தண்டலையாரின் திருவருளினால்  நாடு
விளைவுமிகுந்து வளம்பெற்ற காலத்தில், பாரியென ஆயிரம் பேர்க்கு
அன்னதானம் கொடுக்கும் பலனைப் பார்க்க - பாரியைப்போல ஆயிரக்
கணக்கானவர்களுக்கு உணவுக் கொடையளிக்கும் பலனை நோக்க, நேரிடும்
பஞ்சந்தனிலே எவ்வளவு ஆகிலும் கொடுத்தால் நீதி ஆகும்- வற்கடம்
நேர்ந்த காலத்திலே எவ்வளவு குறைவாகக் கொடுத்தாலும் அதுவே கொடைப்பயன் தரும்.

      (வி-ரை.) வண்மைதானே : தான், ஏ : அசைகள். அகம் - நாடு.
அகம் ஏறி - நாடு  வளம்பெற்று. பாரி : கொடையிலே  சிறந்தவன்;
கடையெழு வள்ளல்களில் ஒருவன். பதின்கலம் ஒரு குடம் என்பன பெருமை
 சிறுமை குறிக்கும் அளவுகள்.

 

     49. தண்டலையை வணங்கு

பிறக்கும்போ தொருபொருளும் கொடுவந்த
     தில்லை! உயிர் பிரிந்து மண்மேல்
இறக்கும்போ திலுங்கொண்டு போவதிலை!
     என்றுசும்மா இருந்து வீணே