பக்கம் எண் :

6

தில்லைவனம் : சிதம்பரத்தின்  மற்றொரு  பெயர்.  தில்லை  மரங்கள்
நிறைந்திருந்ததால்  அப் பெயர்  சிதம்பரத்திற்கு  வந்தது.  நாளடைவில்
‘தில்லைவனம்' என்பது ‘தில்லை' ஆயிற்று.

 

           காப்பு - 2

வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல்
     விளம்பியசொல் மிகுபு ராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல்
     இசைந்தபொருள் எல்லாம் நாடி,
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ
     மொழிவிளக்கம் அறிந்து பாடச்
சோதிபெறும் மதவேழ முகத்தொருவன்
     அகத்தெனக்குத் துணைசெய் வானே.

      (தொ-ரை.) வேதநெறி  விளம்பிய சொல் - மறைவழி  கூறிய
சொற்களையும்,  ஆகமநூல்  விளம்பியசொல் - ஆகம  நூல்கள்  கூறிய
சொற்களையும், மிகுபுராணம்  ஏதுவினில்  காட்டிய சொல் - மிகுதியான
புராணங்கள் காரணத்துடன் விளக்கிய சொற்களையும், இசைந்த பொருள்
எல்லாம்  நாடி - இவற்றிற்  பொருந்திய  பொருள்கள்  எல்லாவற்றையும்
ஆராய்ந்து, உலகுதனில் ஆதிமுதல் விளங்கு பழமொழி விளக்கம் அறிந்து
பாட - உலகத்தில்  தொன்றுதொட்டு  வழங்கிவரும்  பழமொழிகளுக்கு
விளக்கத்தைத் தெரிந்து பாடுவதற்கு, சோதிபெறும் மதவேழ முகத்து ஒருவன்
அகத்து  எனக்குத்  துணைசெய்வான் - ஒளி  பொருந்திய  மதயானை
முகத்தையுடைய ஒப்பற்ற முதல்வன் என் உள்ளத்திலிருந்து துணை செய்வான்.

      (வி-ரை.) வேதம் : நான்மறைகள். ஆகமம் : மறையின்  உறுப்பாக
உள்ளவை.  ஏது - காரணம், ஆதாரம். வேத,  ஆகமம், புராணங்களிலே
கூறப்பட்ட  சொற்களையும்  பொருள்களையும்  நாடிப்  பழமொழிகளுக்கு
விளக்கம்  கூறுவதாகக் குறிப்பிட்டார். ஒருவன் - ஒப்பற்றவன்.

      செய்வானே : ஏ : ஈற்றசை. புராணம் - பழைமை.