55.
கொடுங்கோல் மன்னவன் நாட்டின் ......
படுங்கோலம் அறியாமல் தண்டலையார்
திருப்பணிக்கும் பங்கம் செய்வார்!
நெடுங்கோளும்
தண்டமுமாய் வீணார
வீணனைப்போல் நீதி செய்வார்!
கெடுங்கோபம் அல்லாமல் விளைவுண்டோ?
மழையுண்டோ? கேள்வி யுண்டோ?
கொடுங்கோல்மன் னவன் நாட்டிற் கடும்புலிவா
ழுங்காடு குணமென் பாரே!
|
(தொ-ரை.)
படும் கோலம் அறியாமல் தண்டலையார் திருப்பணிக்கும்
பங்கம் செய்வார் - அடையப்போகும் தன்மையை உணராமல் தண்டலையாரின்
திருத்தொண்டுக்கும் குறைவு புரிவார்கள், வீணார வீணனைப்போல்
நெடுங்கோளும் தண்டமுமாய் நீதிசெய்வார் - வீணார வீணன் என்பானைப்
போலப் பெரிய கொலையும் தண்டனையுமாக அரசியல் புரிவர், (இதனால்)
கெடும்கோபம் அல்லாமல் விளைவு உண்டோ மழை உண்டோ கேள்வி
உண்டோ - (தம்மைக் கெடுக்கும்) சீற்றமேயன்றி நாட்டில் விளைவும் மழையும்
கேள்விமுறையும் இருக்குமோ?, கொடுங்கோல் மன்னவன் நாட்டில்
கடும்புலி வாழும் காடு குணம் என்பார் - முறைதவறிய அரசன் வாழும்
நாட்டில் வாழ்வதினும் கொடிய புலி வாழும் காடு நலந்தரும் என்று அறிஞர்
கூறுவர்.
(வி-ரை.)
கோள் - கொலை. அரசன் ஆட்சி நன்றாயிருப்பின்
மழைபெய்து விளைவு பெருகி நாடு வளமுற்றிருக்கும். இன்றேல் இவை
அழியும் என்று உலகம் கூறும். ‘கொடும்கோல் மன்னன்
வாழும் நாட்டில்
- கடும்புலி வாழும் காடு நன்றே' என்று வெற்றி
வேற்கை கூறும்.
வீணன்
: வீணாறு என்னும் ஆற்றை வெட்டியவன்.
|