பக்கம் எண் :

67

     63. முழுப் பூசணிக்காய் மறைத்தல்

தத்தைமொழி உமைசேரும் தண்டலையார்
     பொன்னிவளம் தழைத்த நாட்டில்
வித்தகமந் திரியில்லாச் சபைதனிலே
     நீதியில்லை! வேந்தர்க் கெல்லாம்
புத்திநெறி நீதிசொல்லு மந்திரியல்
     லாதொருவர் போதிப் பாரோ!
நித்தலுமுண் சோற்றில்முழுப் பூசணிக்காய்
     மறைத்ததுவும் நிசம தாமே!

      (தொ-ரை.) தத்தைமொழி உமைசேரும் தண்டலையார் பொன்னிவளம்
தழைத்த  நாட்டில் -  கிளியெனப்  பேசும்  உமையம்மை (இடப்பாகத்தில்)
அமரும் தண்டலையாரின் காவிரி வளங்கொழிக்கும் (சோழ) நாட்டில், வித்தக
மந்திரி இல்லாச் சபைதனிலே மேன்மை இல்லை - அறிவுடைய அமைச்சன்
இல்லாத அவையிலே உயர்வு உண்டாகாது, வேந்தர்க்கு எல்லாம் புத்தி நெறி
நீதி சொல்லும் மந்திரி அல்லாது ஒருவர் போதிப்பாரோ - அரசர்க்கெல்லாம்
அறிவுரையும்  அரசியல்  நெறியும்  அரசு  முறைமையைக்  கற்பிக்கும்
அமைச்சனை யன்றி ஒருவர் கற்பிப்பாரோ?, நித்தலும் உண் சோற்றில் முழுப்
பூசணிக்காய் மறைத்ததுவும் நிசமதுஆம் - நாள்தோறும் உண்ணும் உணவிலே
முழுப் பூசணிக்காயை மறைத்ததுவும் (அமைச்சனில்லா அரசவையிலே)
உண்மையாக முடியும்.

      (வி-ரை.) ‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க
முடியுமோ?'
என்பது பழமொழி.

 

     64. ‘பூசை வேளையிலே கரடி'

நேசமுடன் சபையில்வந்தால் வேளையறிந்
     திங்கிதமா நிருபர் முன்னே
பேசுவதே உசிதம்அல்லால் நடுவில்ஒரு
     வன்குழறிப் பேசல் எல்லாம்