பக்கம் எண் :

7

.
       அவை அடக்கம்

ள்ளுவர்நூ லாதிபல நூலிலுள
     அரும்பொருளை வண்மை யாக
உள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள்
     முன்நானும் ஒருவன் போலப்
பள்ளமுது நீருலகிற் பரவுபழ
     மொழிவிளக்கம் பரிந்து கூறல்
வெள்ளைமதி யினன்கொல்லத் தெருவதனில்      ஊசிவிற்கும் வினைய தாமே.

      (தொ-ரை.) வள்ளுவர் நூல் ஆதி பல நூலில் உள அரும் பொருளை
- திருக்குறள்  முதலான பல  நூல்களில்  இருக்கும்  அரிய பொருள்களை,
வண்மையாக  உள்ளபடி தெரிந்து  உணர்ந்த  பெரியவர்கள் முன் - சிறந்த
முறையில் உள்ளவாறு ஆராய்ந்து அறிந்த சான்றோர்களுக்கு எதிராக, நானும்
ஒருவன் போல - நானும் ஒரு புலவன் என்று எண்ணி, பள்ளமுதுநீர் உலகில்
பரவு பழமொழி விளக்கம் பரிந்து கூறல் - ஆழமான  பழைய  நீரையுடைய
உலகில் வழங்குகின்ற  பழமொழிகளின் விளக்கத்தை  விரும்பிக்  கூறுதல்,
வெள்ளை மதியினன்  கொல்லத்  தெருவதனில்  ஊசி  விற்கும் வினையது
ஆம் - அறிவு இல்லாதவன் கொல்லர்களின் தெருவிற் சென்று ஊசிவிற்கும்
தொழிலாக ஆய்விடும்.

      (வி-ரை.) முதுமை + நீர் : முதுநீர் (கடல்). கொல்லர் : இரும்புவேலை
செய்யும்  கம்மியர்.
கொல்லத்  தெருவில் ஊசி  விற்க முடியாது என்பது
பழமொழி. கொல்லத் தெருவில் ஊசி வாங்குவார் இல்லாமற் போவது போலப்,
புலவர் குழுவில் இவர் நூலை ஏற்பார்  இல்லாமற் போய்விடுவர் என்பதாம்.
ஊசியை மதிப்பிடுதல் போல், இவர் நூலையும் மதிப்பிடுவதனாற் புலவர் உலகு
இதன் சிறப்பை உணரும் என்பதும் இச் செய்யுளால் உணரலாம்.

      அவை  அடக்கம்  என்பது  புலவருலகு  தம்  நூலை  ஏற்றுக் கொள்ளவேண்டும்  என்பதற்காகத்  தம்மைத்  தாழ்த்திக்  கூறுதலாகும்.
அவைக்கு  அடக்கம்  எனப் பொருள்படும். (நான்காம் வேற்றுமைத் தொகை).