பக்கம் எண் :

74

71. பகடிக்கோ பணம் பத்து! திருப்பாட்டுக்கு ஒரு காசு.

சகமிக்க தண்டலையார் அடிபோற்றும்
     மகராசர் சபையில் வந்தால்,
சுகமிக்க வேசையர்க்குப் பொன்நூறு
     கொடுப்பர்! தமிழ் சொன்ன பேர்க்கோ
அகமிக்க சோறிடுவார்! அந்தணருக்
     கெனின்நாழி அரிசி ஈவார்!
பகடிக்கோ பணம்பத்துத் திருப்பாட்டுக்
     கொருகாசு பாலிப் பாரே.

      (தொ-ரை.) சகம்மிக்க  தண்டலையார்  அடி போற்றும்  மகராசர்
சபையில்  வந்தால் - உலகிற்  சிறப்புற்ற  தண்டலையாரின்  திருவடியை
வணங்கும்  பெருமன்னர்களின் அவைக்குப் போனால், சுகம்  மிக்க
வேசையர்க்கு நூறு பொன் கொடுப்பர் - இன்ப மிகத் தரும் கணிகையர்க்கு
நூறு பொன் கொடுப்பார்கள், தமிழ் சொன்ன பேர்க்கோ அகம்மிக்க சோறு
இடுவர் - தமிழ்க் கவி கூறியவர்க்கு வீட்டில் மிகுந்துள்ள சோற்றைப்
போடுவர். அந்தணருக்கு எனின் நாழி அரிசி ஈவர் - அந்தணர்களுக் காயின்
படியரிசி கொடுப்பர். பகடிக்கோ பணம் பத்து திருப்பாட்டுக்கு ஒருகாசு
பாலிப்பார்! - பகடிக்கெனிற் பத்துப்பணமும் அழகிய பாவினுக்கு ஒரு காசும்
அளிப்பார்கள்.

      (வி-ரை.) பகடி - ஏமாற்றுகிறவன் (வெளிவேடக்காரன்). உலகம்
பொய்ம்மை வலையிலே விழுவது இயல்பு என்பதாம்.

 

     72. பணந்தானே பந்தியிலே

பணந்தானே அறிவாகும்! பணந்தானே
     வித்தையும்ஆம்! பரிந்து தேடும்
பணந்தானே குணமாகும்! பணமில்லா
     தவர்பிணமாம் பான்மை சேர்வர்!