பக்கம் எண் :

79

     77. பித்தருக்குத் தங்குணமே ...

எத்தருக்கும் உலுத்தருக்கும் ஈனருக்கும்
     மூடருக்கும் இரக்கம் பாரா
மத்தருக்கும் கொடிதாம்அவ் வக்குணமே
     நற்குணமா வாழ்ந்து போவார்!
பத்தருக்கு நலங் காட்டும் தண்டலையா
     ரேஅறிவார்! பழிப்பா ரேனும்
பித்தருக்குத் தங்குணமே நூலினும்செம்
     மையதான பெற்றி ஆமே.

      (தொ-ரை.) எத்தருக்கும் உலுத்தருக்கும் ஈனருக்கும் மூடருக்கும்
இரக்கம்பாரா  மத்தருக்கும் - ஏமாற்றுவோரும் ஈயாரும்  இழிஞரும்
பேதையரும் அருட்பண்பிலா மயக்கரும் ஆகிய இவர்களுக்கு, கொடிது
ஆம் அவ் வக்குணமே நற்குணம்ஆ(க) வாழ்ந்துபோவார் - கொடியதான
அந்த  அந்தக்  குணமே  நற்குணமாகக்  கொண்டு  உலகிலே
வாழ்ந்தொழிவார்கள்; பத்தருக்கு நலம் காட்டும் தண்டலையாரே இவர்
நிலையை அறிவார் - அன்பருக்கு நன்மை பயக்கும் தண்டலையாரே
இவர்நிலையை அறிவார்; பழிப்பாரேனும் பித்தருக்குத் தம்குணமே நூலினும் செம்மையது ஆன பெற்றி ஆமே - [இவர்களின் நிலைமை (பிறர்)]
பழித்தாலும் வெறியருக்குத் தங்கள் குணமே நூலினும் செவ்வியதாக
இருப்பதைப்போல ஆகும்
.

      (வி-ரை.) ‘கொடிறும் பேதையும் கொண்டது விடா' என்னும்
பழமொழியும்,
‘காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு'
என்னும் வள்ளுவர் வாய்மொழியும்
இங்கு நினைக்கத் தக்கன.

 

     78. அன்ன நடை நடக்கப் போய் ...

பன்னகவே ணிப்பரமர் தண்டலையார்
     நாட்டிலுள பலருங் கேளீர்!
தன்னறிவு தன்னினைவு தன்மகிமைக்
     கேற்றநடை தகுமே அல்லால்,