பக்கம் எண் :

8

                         நூல்

1. திருவிளக்கிட்டார் தமையே தெய்வம் அளித்திடும்

வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில்
     உட்புகுந்து வலமாய் வந்தே
ஒருவிளக்கா யினும்பசுவின் நெய்யுடன்தா
     மரைநூலின் ஒளிர வைத்தால்
கருவிளக்கும் பிறப்பும் இல்லை! இறப்பும் இல்லை!
     கைலாசம் காணி ஆகும்!
திருவிளக்கிட் டார்தமையே தெய்வம் அளித்
     திடும்! வினையும் தீருந் தானே!

      (தொ-ரை.) வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில் உட்புகுந்து
வலமாய் வந்து - நலம் அருளும் தண்டலை யிறைவரின் திருக்கோயிலின்
உள்ளே சென்று, வலம் வந்து (வணங்கி), ஒரு விளக்காயினும் பசுவின்
நெய்யுடன் தாமரை நூலின் ஒளிர வைத்தால் - ஒரு விளக்கேனும் ஆவின்
நெய்வார்த்துத் தாமரை நூலிலே ஒளிதரும்படி வைத்தால் கருவிளக்கும்
பிறப்பும் இல்லை - (மறுமுறையும்) கருவிலே துலங்கும் பிறவித் துன்பம்
இல்லை, இறப்பும் இல்லை - இறுதியும் வாராது, கைலாசம் காணி ஆகும் -
(இறைவன் எழுந்தருளி யிருக்கும்) திருக்கயிலை உரிமையாகும், திருவிளக்கு
இட்டார் தமையே தெய்வம் அளித்திடும் - திருவிளக்கு வைத்தவர்களையே
தெய்வம் காப்பாற்றும், வினையும் தீரும் - பழவினையும் நீங்கும்.

      (வி-ரை.) இட்டார் தமையே: தம்: சாரியை. ஏ : பிரிநிலை
யிடைச்சொல். திரு : உரிச்சொல். ஒரு விளக்காயினும் : உம் : இழிவு சிறப்புப்
பொருளில் வந்த இடைச்சொல். தெய்வம் : இருதிணைக்கும் பொதுவான பெயர்.

      (கருத்து) திருக்கோயில் களுக்குத் திருவிளக்கிடுவது நல்லது.