பக்கம் எண் :

99

100. பித்தளைக்கு நாற்றம் இயற்கை

நித்தம்எழு நூறுநன்றி செய்தாலும்
     ஒருதீது நேர வந்தால்,
அத்தனையும் தீதென்பார்! பழிகருமக்
     கயவர்குணம் அகற்றல் ஆமோ?
வித்தகஞ்சேர் தண்டலையார் வளநாட்டிற்
     சாம்பர்இட்டு விளக்கி னாலும்
எத்தனைசெய் தாலும்என்ன? பித்தளைக்குத்
     தன்நாற்றம் இயற்கை ஆமே.

      (தொ-ரை.) வித்தகம் சேர் தண்டலையார் வளநாட்டில் -
அறிவுத்துறையுடைய தண்டலையாரின் வளமிக்க நாட்டிலே, சாம்பர் இட்டு
விளக்கினாலும் எத்தனை செய்தாலும் என்ன - சாம்பலைக் கொண்டு
தேய்த்தாலும் என்ன செய்தாலும், பயன் ஏது? பித்தளைக்குத் தன் நாற்றம்
இயற்கை ஆம் - பித்தளையின் களிம்பு நாற்றம் இயல்பானதே ஆகும்;
(அதுபோல), பழிகருமக் கயவர் - பழிப்புக்குரிய செயலைச் செய்யுந்
தீயவர்களுக்கு, நித்தம் எழுநூறு நன்றி செய்தாலும் - நாள்தோறும்
நூற்றுக்கணக்கான நன்மைகளைப் புரிந்தாலும், ஒரு தீது நேர வந்தால்
அத்தனையும் தீது என்பார் - ஒரு தீமை (நம்மை யறியாமலே) நேர்ந்து
விட்டால் அவ்வளவு நன்மையையும் தீது என்றே கூறிவிடுவர்; குணம்
அகற்றல் ஆமோ - (அவர்) பண்பை மாற்ற இயலுமோ?

      (வி-ரை.) பல தீமை செய்தாலும் ஒரு நன்றி செய்தால், தீமையை
மறந்து நன்றியை நினைவில் வைப்பது நல்லோர் இயல்பு ‘கொன்றன்ன
இன்னா செயினும் அவர்செய்த, ஒன்று நன்(று) உள்ளக் கெடும்' என்பது
வள்ளுவர் வாய்மொழி. ஆனால், எத்துணை நன்றி செய்யினும் ஒரு தீமை
செய்தால் அத்துணை நன்றியையும் மறந்து தீமையை மறவாதிருத்தல் தீயோர்
இயல்பு.
‘பித்தளை நாற்றம் போகாது' என்பது பழமொழி. ‘கற்பூரப்
பாத்திகட்டிக் கத்தூரி யெருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப் - பொற்பூர
உள்ளிதனை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்' என்பது
விவேக சிந்தாமணி.

_____