“கூடுஞ் சபையில் கவிவா ரணங்களைக் கோளரிபோல் சாடுஞ் சதாசிவ சற்குரு வேமுன்னுள் தந்தைதன்னால் பாடும் புலவர்க ளானோ மினிச்செம்மற் பட்டியெங்கும் காடும் செடியுமென் னோதமிழ்க் காரிகை கற்பதுளே” |
காடு செடிகளின் பக்கத்திலிருந்துகொண்டு காரிகையைப் பாடம் செய்துகொண்டிருந்தவரைப் படிக்காசு புலவர் பார்த்து இவ்வாறு பாடினர். வைத்தியநாத நாவலர் காலத்தில் ஒருவர் இருவர் அவரிடம் இலக்கணம் கற்றுப் புலவரானார்கள். அவர் புதல்வர் காலத்தில் அவரிடம் பலர் இலக்கணம் கற்றனர் என்பது இதன் கருத்து. |
இவர் காலத்தில் அரைகுறைப் புலவர் பலர் தோன்றியதைக் கண்டு வருந்திப் பாடியது; |
“குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியன்சங் கில்லை குறும்பியளவாக காதைக் குடைந்து தோண்டி எட்டினமட டறுப்பதற்கோ வில்லி யில்லை இரண்டொன்றாய் முடிந்துதலை இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்து பாடிந் தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகளுண்டு தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே” |
“வெண்பாவிற் புகழேந்தி” என்ற ஒரு தனிப்பாடல், இவர் சந்தப்பாப் பாடுவதில் சிறந்தவர் என்று குறிக்கின்றது. இத்தகைய அரும்பெரும் புலவர்களது தமிழ்க் கவிதைகளைக் கற்று இன்புறுதல் தமிழ்மக்களது கடமையாகும். |