3

குருபாதம்
  

முன்னுரை
  

தில்லையில்     எழுந்தருளியிருக்கும்  சிவகாமி யம்மையைப் பாடிப்
படிக்காசு   பெற்ற   பெருமை   யுடையவராகிய  படிக்காசு  தம்பிரான்
இயற்றியுள்ள  நூல்களில்  தண்டலையார்  சதகம்  ஓர்  அறவுரை நூல்.
இதன்   ஒவ்வொரு  பாடலிலும்  இறுதியில்  ஒவ்வொரு  பழமொழியை
அமைத்து  அரிய  கருத்து   விளக்கப்படுகின்றது.  அதனால்,  இந்நூல்,
‘பழமொழி    விளக்கம்’    என்ற   மற்றொரு   பெயரையும்   பெற்று
விளங்குகிறது.
  

தொன்று தொட்டுவரும் பழமொழிகளை  வைத்து அரிய கருத்துகளை
விளக்கும்  பாடல்களைச்  செய்வது  பழைமையாகவே  உள்ள ஒருமுறை
என்பதற்கு,  பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களில்   ஒன்றாகிய, ‘பழமொழி
நானூறு’  என்னும் நூலே  போதிய சான்றாகும். தொல்காப்பியனார் “ஏது
நுதலிய    முதுமொழி    யானும்”    என்று   செய்யுளியலிற்   கூறிய
இலக்கணத்தின்   வழியே  பழமொழி  நானூறு  செய்யப்பட்ட  தென்பர்
பேராசிரியர்.
  

பழமொழிகளை     முதலிற்     கூறியவர்    இன்னார்    என்பது
அறியப்படாவிடினும்,   அவை   செவிவழக்காய்  மக்களிடையே  நிலவி,
அரும்பெருங்கருத்துக்களை உணர்த்திவருகின்றன.