6

சிவமயம்
  

படிக்காசு புலவர் வரலாற்றுச் சுருக்கம்
  

பிற்காலப்   புலவர்களில்  புகழ்பெற்று  விளங்கிய சிலருள் படிக்காசு
புலவர்  ஒருவர்.  இவர்  இல்லறத்திலிருந்து பின் துறவு பூண்டமையால்,
‘படிக்காசு  தம்பிரான்’  என்றும் சொல்லப்படுகின்றார். இவர் தொண்டை
நாட்டில்  உள்ள  பொன்விளைந்த களத்தூரில் பிறந்து அங்கே பள்ளிக்
கல்வியைக்    கற்றபின்,    இலக்கண    விளக்கம்செய்த   திருவாரூர்
வைத்தியநாத  நாவலரை  அடைந்து இலக்கண இலக்கியக் கல்விகளைக்
கற்றுப்  புலமை  நிரம்பி,  அழகிய  இனிய  கவிகளை  எளிதில் பாடும்
திறனும்  பெற்று  விளங்கினார்.  பின்னர்,  திருமணம்  புரிந்துகொண்டு
இல்வாழ்க்கை நடத்தினார்.
  

அக்காலத்தில்     இவர்  வள்ளல்கள்  சிலரிடம் சென்று கவிபாடிப்
பரிசில்கள் பெற்றார். அவ்வள்ளல்களில் குறிப்பிடத்  தக்கவர்கள் வல்லம்
காளத்தி   பூபதி,   மாவண்டூர்  கத்தூரி  முதலியார்  புதல்வர்  கறுப்ப
முதலியார்,  காயற்பட்டினம்  சீதக்காதி என்பவராவார்கள்.  மற்றும் சேது
சமஸ்தானம்   இரகுநாத   சேதுபதி.   சிவகங்கை    திருமலைத்தேவர்
என்பவர்களும்  இவரால்  பாடப்பெற்றவர்கள்.  இவர்களில்  திருமலைத்
தேவர்  யாது  காரணத்தாலோ  இவரைக்  கிளிக்கூண்டு போன்ற  ஒரு
சிறையில்  அடைத்து  வைத்துப்  பின்பு  இவரது  பாடலைக்  கேட்டுச்
சிறைவிடுவித்து அளவளாவிப் பரிசுகள் வழங்கினார்.