பின்பு தாம் அலுவலைவிட்டு அமைதியுற்றிருக்க எண்ணித் தம் ஞானாசிரியரை
அடைந்து தமது கருத்தை விண்ணப்பித்து அருளாணை பெற்றுத் திருமடத்திலேயே
பதினாறொடுக்கத்திலிருந்து சமாதிநிலை பயின்றார். அக்காலத்தில் ஒருநாள்
தில்லையில் கூத்தப்பெருமானது திருமுன்பிலிருந்த திரைச்சீலை தீப்பற்றியதை
யோகக் காட்சியால் உணர்ந்து இங்கே தம் கைகளைப் பிசைந்தார்; அங்கே தீ
அணைந்தது. தம்பிரானது செயலைக் கூத்தப்பெருமான், சிவசங்கர தீக்ஷ¤தர்
என்பவரது கனவில் தோன்றிச் சொல்லி, ஒரு விபூதிப்பையைக் கொடுத்துத்
தம்பிரான்பால் சேர்ப்பிக்குமாறு கட்டளையிட்டு மறைந்தார். தீக்ஷ¤தர்
விழித்துணர்ந்து, அதிசயமுற்று பெருமான் கட்டளைப்படியே தருமையை அடைந்து,
ஞானதேசிகரிடத்தில் நடந்தவைகளை விண்ணப்பிக்க, அவர், படிக்காசரை அழைத்து
விபூதிப்பையை அவர் கரத்தில் அளிப்பித்து, தீக்ஷ¤தருக்கும் தக்கவாறு
சிறப்புச்செய்து அனுப்பினார். தம்பிரான் சுவாமிகள், இறைவன் திருவருளை
எண்ணி மனம் உருகினார். இங்ஙனம் சிறந்த தமிழ்ப் புலவராயும், துறவியாயும்,
யோகியாயும், அருள்ஞானச் செல்வராயும் விளங்கிய படிக்காசு தம்பிரான், தாம்
பயின்ற சமாதிநிலையின்படியே இறைவன் திருவடி நிழலை அடைந்தார். இவரது
தமிழ்ப்பாக்களின் சிறப்பை, பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பவர்
பின்வருமாறு வியந்து பாடியுள்ளார். |