1 முதல் 10 வரை
 

1.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்

 

    திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்
    போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்
    குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி
    என்றன் விழுத்துணையே.

   

2.

துணையும் தொழுந்தெய்வ மும்பெற்ற

 

    தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட
    வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென்
    பாசாங் குசமும்கையில்
அணையும் திரிபுர சுந்தரி
    யாவ(து) அறிந்தனமே.

   

3.

அறிந்தேன் எவரும் அறியா

 

    மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்
    கேதிரு வேவெருவிப்
பிறிந்தேன்நின் அன்பர் பெருமைஎண்
    ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழுநர குக்குற
    வாய மனிதரையே.

   

4.

மனிதரும் தேவரும் மாயா

 

    முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே
    கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும்
    பகீரதி யும்படைத்த
புனிதரும் நீயும்என் புந்திஎந்
    நாளும் பொருந்துகவே.

   

5.

பொருந்திய முப்புரை செப்புரை

 

    செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல்
    மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்(சு)அமு தாக்கிய
    அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி
    பாதம்என் சென்னியதே.

   

6.

சென்னிய(து) உன்பொன் திருவடித்

 

    தாமரை சிந்தை யுள்ளே
மன்னிய(து) உன்திரு மந்திரம்
    சிந்துர வண்ணப்பெண்ணே
முன்னிய நின்அடி யாருடன்
    கூடி முறைமுறையே
பன்னிய(து) என்றும்உன் றன்பர
    மாகம பத்ததியே.

   

7.

ததியுறு மத்திற் சுழலும்என்

 

    ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்
    டாய்கம லாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும்
    மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடி யாய்சிந்து
    ரானன சுந்தரியே.

   

8.

சுந்தரி எந்தை துணைவிஎன்

 

    பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தி
    னாள்மகி டன்தலைமேல்
அந்தரி நீலி அழியாத
    கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள்மலர்த்
    தாள்என் கருத்தனவே.

   

9.

கருத்தன எந்தைதன் கண்ணன

 

    வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன பால்அழும் பிள்ளைக்கு
    நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும்
    செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும்அம்
    மேவந்தென் முன்நிற்கவே.

   

10.

நின்றும் இருந்தும் கிடந்தும்

 

    நடந்தும் நினைப்ப(து) உன்னை
என்றும் வணங்குவ(து) உன்மலர்த்
    தாள்எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொரு ளேஅரு
    ளேஉமை யேஇமயத்(து)
அன்றும் பிறந்தவ ளேஅழி
    யாமுத்தி ஆனந்தமே.