11 முதல் 20 வரை
 

11.

ஆனந்த மாய்என் அறிவாய்

 

    நிறைந்த அமுதமுமாய்
வானந்த மான வடி(வு)உடை
    யாள்மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார
    விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங் காம்எம்பி
    ரான்முடிக் கண்ணியதே.

   

12.

கண்ணிய(து) உன்புகழ் கற்ப(து)உன்

 

    நாமம் கசிந்துபத்தி
பண்ணிய(து) உன்இரு பாதாம்
    புயத்தில் பகல்இரவா
நண்ணிய(து) உன்னை நயந்தோர்
    அவையத்து நான்முன்செய்த
புண்ணியம் ஏ(து)என்அம் மேபுவி
    ஏழையும் பூத்தவளே.

   

13.

பூத்தவ ளேபுவ னம்பதி

 

    னான்கையும் பூத்தவண்ணம்
காத்தவ ளேபின்கரந்தவ
    ளேகறைக் கண்டனுக்கு
மூத்தவ ளேஎன்றும் மூவா
    முகுந்தற்(கு) இளையவளே
மாத்தவ ளேஉன்னை அன்றிமற்
    றோர்தெய்வம் வந்திப்பதே.

   

14.

வந்திப் பவர்உன்னை வானவர்

 

    தானவர் ஆனவர்கள்
சிந்திப் பவர்நல் திசைமுகர்
    நாரணர் சிந்தையுள்ளே
பந்திப் பவர்அழி யாப்பர
    மானந்தர் பாரில்உன்னைச்
சந்திப் பவர்க்(கு) எளிதாம்
    எம்பிராட்டிநின் தண்ணளியே.

   

15.

தண்ணளிக் கென்றுமுன் னேபல

 

    கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக் கும்செல்வ மோபெறு
    வார்மதி வானவர்தம்
விண்ணளிக் கும்செல் வமும்அழி
    யாமுத்தி வீடுமன்றோ
பண்ணளிக் கும்சொல் பரிமள
    யாமளைப் பைங்கிளியே.

   

16.

கிளியே கிளைஞர் மனத்தே

 

    கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கிட
    மேஎண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளிமுதல் பூதங்க
    ளாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவள விற்(கு)அள
    வான(து) அதிசயமே.

   

17.

அதிசய மான வடி(வு)உடை

 

    யாள்அர விந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தர
    வல்லி துணைஇரதி
பதிசய மான(து) அபசய
    மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன் றோவாம
    பாகத்தை வவ்வியதே.

   

18.

வவ்விய பாகத்(து) இறைவரும்

 

    நீயும் மகிழ்ந்திருக்கும்
செல்வியும் உங்கள் திருமணக்
    கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்
    பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன்என் மேல்வரும்
   போது வெளிநிற்கவே.

   

19.

வெளிநின்ற நின்திரு மேனியைப்

 

    பார்த்தென் விழியும்நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்ட
    தில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்ற
    தென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும்
    மேவி உறைபவளே.

   

20.

உறைகின்ற நின்திருக் கோயில்நின்

 

    கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறை யின்அடி
    யோமுடி யோஅமுதம்
நிறைகின்ற வெண்திங்க ளோகஞ்ச
    மோஎன்றன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதி யோபூர
    ணாசல மங்கலையே.