31 முதல் 40 வரை
 

31.

உமையும் உமையொரு பாகனும்

 

    ஏக உருவில்வந்திங்(கு)
எமையும் தமக்கன்பு செய்யவைத்
    தார்இனி எண்ணுதற்குச்
சமையங் களுமில்லை ஈன்றெடுப்
    பாள்ஒரு தாயும்இல்லை
அமையும் அமையுறு தோளியர்
    வேல்வைத்த ஆசையுமே.

   

32.

ஆசைக்கடலில் அகப்பட்டு

 

    அருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லல் படஇருந்
    தெனைநின் பாதம்என்னும்
வாசக் கமலம் தலைமேல்
    வலியவைத்(து) ஆண்டுகொண்ட
நேசத்தை என்சொல்லு வேன்ஈசர்
    பாகத்து நேரிழையே.

   

33.

இழைக்கும் வினைவழி யேஅடும்

 

    காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்(து) அஞ்சல்என்
    பாய்அத்தர் சித்தம்எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை
    யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழு(து)உன்னை யேஅன்னை
    யேஎன்பன் ஓடிவந்தே.

   

34.

வந்தே சரணம் புகும்அடி

 

    யாருக்கும் வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய்
    இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி
    ஆகமும் பாகமும்பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர்
    ஞாயிரும் திங்களுமே.

   

35.

திங்கட்பகவின் மணம் நாறும்

 

    சீறடி சென்னிவைக்க
எங்கட்(கு)ஒருதவம் எய்திய வாஎண்
    ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து
    மோதரங் கக்கடலுள்
வெங்கட் பணியணை மேல்துயில்
    கூரும் விழுப்பொருளே.

   

36.

பொருளே பொருள்முடிக் கும்போக

 

    மேஅரும் போகம்செய்யும்
மருளே மருளில் வருந்தெரு
    ளேஎன் மனத்துவஞ்சத்(து)
இருளேதும் இன்றி ஒளிவெளி
    யாகி இருக்கும்உன்றன்
அருளே(து) அறிகின்றி லேன்
    அம்புயாதனத்(து) அம்பிகையே.

   

37.

கைக்கே அணிவது கன்னலும்

 

    பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து
    மாலை விடஅரவின்
பைக்கே அணிவது பன்மணிக்
    கோவையும் பட்டும்எட்டுத்
திக்கே அணியும் திருவுடை
    யான்இடம் சேர்பவளே.

   

38.

பவளக் கொடியில் பழுத்த

 

     செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகை யும்துணை
    யாஎங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை
    சாய்க்கும் துணைமுலையாள்
அவளைப் பணிமின்கண்டீர்அம
    ராவதி ஆளுகைக்கே.

   

39.

ஆளுகைக்(கு)உன்றன் அடித்தா

 

    மரைகள்உண்(டு) அந்தகன்பால்
மீளுகைக்(கு) உன்றன் விழியின்
    கடையுண்டு மேல்இவற்றின்
மூளுகைக்(கு) என்குறை நின்குறையே
    அன்று முப்புரங்கள்
மாளுகைக்(கு) அம்பு தொடுத்தவில்
    லான்பங்கில் வாள்நுதலே.

   

40.

வாணுதல் கண்ணியை விண்ணவர்

 

    யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்(கு) எண்ணிய எம்பெரு
    மாட்டியைப் பேதைநெஞ்சில்
காணுதற்(கு) அண்ணியள் அல்லாத
    கன்னியைக் காணும்அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம்அன்றோ?
    முன்செய் புண்ணியமே.