தொடக்கம்
41 முதல் 50 வரை
41.
புண்ணியம் செய்தன மேமன
மேபுதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால் நண்ணிஇங் கேவந்து தம்மடி யார்கள் நடுவிருக்கப் பண்ணிநம் சென்னியின் மேல்பத்ம பாதம் பதித்திடவே.
42.
இடங்கொண்டு விம்மி இணைகொண்(டு)
இறுகி இளகிமுத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண்(டு) இறைவர் வலியநெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே.
43.
பரிபுரச் சீறடி பாசாங்
குசைபஞ்ச பாணிஇன்சொல் திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப் புச்சிலைக்கை எரிபுரை மேனி இறைவர்செம் பாகத்(து) இருந்தவளே.
44.
தவளே இவள்எங்கள் சங்கர
னார்மனை மங்கலமாம் அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும்ஆம் துவளேன் இனியொரு தெய்வமுண் டாகமெய்த் தொண்டுசெய்தே.
45.
தொண்டுசெய் யாதுநின் பாதம்
தொழாது துணிந்திச்சையே பண்டுசெய் தார்உள ரோஇல ரோஅப் பரிசடியேன் கண்டுசெய் தால்அது கைதவ மோஅன்றிச் செய்தவமோ மிண்டுசெய் தாலும் பொறுக்கைநன் றேபின் வெறுக்கையன்றே.
46.
வெறுக்கும் தகைமைகள் செய்யினும்
தம்மடி யாரைமிக்கோர் பொறுக்கும் தகைமை புதியதன் றேபுது நஞ்சைஉண்டு கறுக்கும் திருமிடற் றான்இடப் பாகம் கலந்தபொன்னே மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான்உன்னை வாழ்த்துவனே.
47.
வாழும் படியொன்று கண்டுகொண்
டேன்மனத் தேயொருவர் வீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம் ஏழும் பருவரை எட்டும்எட் டாமல் இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடத்து சுடர்கின்றதே.
48.
சுடரும் கலைமதி துன்றும்
சடைமுடிக் குன்றில்ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்துநெஞ்சில் இடரும் தவிர்த்திமைப் போதிருப் பார்பின்னும் எய்துவரோ? குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
49.
குரம்பை அடுத்துக் குடிபுக்க
ஆவிவெங் கூற்றுக்கிட்ட வரம்பை அடுத்து மறுகும்அப் போது வளைக்கைஅமைத்(து) அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்(து) அஞ்சல்என்பாய் நரம்பை அடுத்த இசைவடி வாய்நின்ற நாயகியே.
50.
நாயகி நான்முகி நாரா
யணிகை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கிஎன் றாயகி யாதி உடையாள் சரணம் அரண்நமக்கே.