61 முதல் 70 வரை
 

61.

நாயே னையும்இங்(கு) ஒருபொரு

 

    ளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்
    டாய்நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்
    தாய்என்ன பேறுபெற்றேன்
தாயே மலைமக ளேசெங்கண்
    மால்திருத் தங்கைச்சியே.

   

62.

தங்கச் சிலைகொண்டு தானவர்

 

    முப்புரம் சாய்த்துமத
வெங்கண் கரியுரி போர்த்தசெஞ்
    சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக்
    குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் அலரும்எப்
    போதும்என் சிந்தையதே.

   

63.

தேறும் படிசில ஏதுவும்

 

    காட்டின்முன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில்
    கொட்டும் தறிகுறிக் கும்சமயம்
ஆறும் தலைவி இவளாய்
    இருப்ப(து) அறிந்திருந்தும்
வேறும் சமயம்உண்
    டென்றுகொண் டாடிய வீணருக்கே.

   

64.

வீணே பலிகவர் தெய்வங்கள்

 

    பாற்சென்று மிக்கஅன்பு
பூணேன் உனக்(கு)அன்பு பூண்டுகொண்
    டேன்நின் புகழ்ச்சியன்றிப்
பேணேன் ஒருபொழு தும்திரு
    மேனிப்ர காசமன்றிக்
காணேன் இருநில மும்திசை
    நான்கும் ககனமுமே.

   

65.

ககனமும் வானும் புவனமும்

 

    காணவிற் காமன்அங்கம்
தகனமுன் செய்த தவப்பெரு
    மாற்குத் தடக்கையும்செம்
முகனுமந் நான்கிரு மூன்றெனத்
    தோன்றிய மூதறிவின்
மகனுமுண் டாயதன் றோவல்லி
    நீசெய்த வல்லபமே.

   

66.

வல்லபம் ஒன்றறி யேன்சிறி

 

    யேன்நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்றொன்றி
    லேன்பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்
    பாய்வினை யேன்தொடுத்த
சொல்லவ மாயினும் நின்திரு
    நாமங்கள் தோத்திரமே.

   

67.

தோத்திரம் செய்து தொழுதுமின்

 

    போலும்நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில்வை
    யாதவர் வண்மைகுலம்
கோத்திரம் கல்வி குணம்குன்றி
    நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழ
    லாநிற்பர் பாரெங்குமே.

   

68.

பாரும் புனலும் கனலும்வெங்

 

    காலும் படர்விசும்பும்
ஊரும் முருகு சுவையொளி
    யூறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம
    சுந்தரி சீறடிக்கே
சாரும் தவமுடையார் படை
    யாத தனமில்லையே.

   

69.

தனந்தரும் கல்வி தரும்ஒரு

 

    நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்
    தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம்
    தரும்அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ லாள்
    அபிராமி கடைக்கண்களே.

   

70.

கண்களிக் கும்படி கண்டுகொண்

 

    டேன்கடம் பாடவியில்
பண்களிக் கும்குரல் வீணையும்
    கையும் பயோதரமும்
மண்களிக் கும்பச்சை வண்ணமும்
    ஆகி மதங்கர்குலப்
பெண்களிற் றோன்றிய எம்பெரு
    மாட்டிதன் பேரழகே.