71 முதல் 80 வரை
 

71.

அழகுக்(கு) ஒருவரும் ஒவ்வாத

 

    வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்
    தாள்பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள
    யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றநெஞ் சேயிரங்
    கேலுனக்(கு) என்குறையே.

   

72.

என்குறை தீரநின்(று) ஏத்துகின்

 

    றேன்இனி யான்பிறக்கின்
நின்குறையே அன்றி யார்குறை
    காண்இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற
    நேரிடை மெல்லியலாய்
தன்குறை தீரஎங் கோன்சடை
    மேல்வைத்த தாமரையே.

   

73.

தாமம் கடம்பு படைபஞ்ச

 

    பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும்பொழு(து)
    எமக் கென்றுவைத்த
சேமம் திருவடி செங்கைகள்
    நான்(கு)ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ
    டிரண்டு நயனங்களே.

   

74.

நயனங்கள் மூன்றுடை நாதனும்

 

    வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராம
    வல்லி அடியிணையைப்
பயன்என்று கொண்டவர் பாவையர்
    ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக்
    காவினில் தங்குவரே.

   

75.

தங்குவர் கற்பகத் தருவின்

 

    நீழலில் தாயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாப்
    பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ்
    புவனமும் பூத்தஉந்திக்
கொங்கிவர் பூங்குழ லாள்திரு
    மேனி குறித்தவரே.

   

76.

குறித்தேன் மனத்தில்நின் கோலம்எல்

 

    லாம்நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற
    நேர்வழி வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்
    பிரான்ஒரு கூற்றைமெய்யில்
பறித்தே குடிபுகு தும்பஞ்ச
    பாண பயிரவியே.

   

77.

பயிரவி பஞ்சமி பாசாங்

 

    குசைபஞ்ச பாணிவஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி
    காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி
    சூலி வாராகி யென்றே
செயிரவி நான்மறை சேர்திரு
    நாமங்கள் செப்புவரே.

   

78.

செப்பும் கனக கலசமும்

 

    போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம
    வல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும்
    விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்
    தேன்என் துணைவிழிக்கே.

   

79.

விழிக்கே அருளுண்(டு) அபிராம

 

    வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்(டு)
    எமக்(கு)அவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க
    ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்
    மோடென்ன கூட்டினியே.

   

80.

கூட்டிய வாஎன்னைத் தன்னடி

 

    யாரில் கொடியவினை
ஓட்டிய வாஎன்கண் ஓடிய
    வாதன்னை உள்ளவண்ணம்
காட்டிய வாகண்ட கண்ணும்
    மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வாநடம் ஆடகத்
    தாமரை ஆரணங்கே.