81 முதல் 90 வரை
 

81.

அணங்கே அணங்குகள் நின்பரி

 

    வாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகி
    லேன்நெஞ்சில் வஞ்சகரோ(டு)
இணங்கேன் என(து) உன(து)
    என்றிருப்பார்சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவொன்றி லேன்என்
    கண்நீவைத்த பேரளியே.

   

82.

அளியார் கமலத்தில் ஆரணங்

 

    கேஅகி லாண்டமும்நின்
ஒளியாக நின்ற ஒளிர்திரு
    மேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக் கரணங்கள்
    விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின்எங்ங னேமறப்
    பேன்நின் விரகினையே.

   

83.

விரவும் புதுமலர் இட்டுநின்

 

    பாத விரைக்கமலம்
இரவும்பகலும் இறைஞ்சவல்
    லார்இமை யோர்எவரும்
பரவும் பதமும் அயிரா
    வதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக்
    காவும் உடையவரே.

   

84.

உடையாளை ஒல்கு செம்பட்டு

 

    உடையாளை ஒளிர்மதிசெஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடை
    யாளைத் தயங்குநுண்ணூல்
இடையாளை எங்கள்பெம் மானிடை
    யாளைஇங்(கு) என்னைஇனிப்
படையாளை உங்களை யும்படை
    யாவண்ணம் பார்த்திருமே.

   

85.

பார்க்கும் திசைதொறும் பாசாங்

 

    குசமும் பனிச்சிறைவண்(டு)
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும்
    கரும்பும்என் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரை யாள்திரு
    மேனியும் சிற்றிடையும்
வார்க்குங் கும்முலை யும்முலை
    மேல்முத்து மாலையுமே.

   

86.

மாலயன் தேட மறைதேட

 

    வானவர் தேடநின்ற
காலையும் சூடகக் கையும்
கொண்டு கதித்தகப்பு
வேலைவெங் காலன்என் மேல்விடும்
    போது வெளிநில்கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும்
    போலும் பணிமொழியே.

   

87.

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத

 

    நின்திரு மூர்த்திஎன்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற
    தால்விழி யால்மதனை
அழிக்கும் தலைவர் அழியா
    விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படியொரு பாகம்கொண்
    டாளும் பராபரையே.

   

88.

பரமென்று உனையடைந் தேன்தமி

 

    யேனும்உன் பத்தருக்குள்
தரமன்று இவன்என்று தள்ளத்
    தகாது தரியலர்தம்
புரம்அன்று எரியப் பொருப்புவில்
    வாங்கிய போதில்அயன்
சிரம்ஒன்று செற்றகை யான்இடப்
    பாகம் சிறந்தவளே.

   

89.

சிறக்கும் கமலத் திருவேநின்

 

    சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும்
   நீயும் துரியம்அற்ற
உறக்கம் தரவந்(து) உடம்போ(டு)
    உயிர்உற வற்றறிவு
மறக்கும் பொழுதென்முன் னேவரல்
    வேண்டும் வருந்தியுமே.

   

90.

வருந்தா வகைஎன் மனத்தா

 

    மரையினில் வந்துபுகுந்(து)
இருந்தாள் பழைய இருப்பிட
    மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள்
    இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
    னதைநல்கும் மெல்லியலே.