கட
தஞ்சைவாணன் கோவை
106

 
     இவ்விரண்டையும் `குற்று` என்னும் பல பொருள் குறித்த வொரு சொல்லால்
நீலப்பூவைக் `கொய்து` என்றும், நித்திலத்தை `அவைத்து` என்றும்  கூறினாரென்று
உணர்க.

     அவைத்தல் - உரலில்    நெல்    முதலியன     பெய்து      குற்றுதல்.

`துவைக்குந் துணி முன்னீர் கொற்கை மகளிர்
அவைப்பதம் பல்லிற் கழகொவ்வா முத்தம்
மணங்கமழ்தா ரச்சுதன் மண்காக்கும் வேலின்
அணங்கமுத மன்னலார் பாடல்.`

     என இதனுள், பெண்கள் சிறுசோறடுதற்கு நித்திலங் குற்றுதற்கு  அவைத்தல்
என்று பொருள் வந்தவாறு கண்டுகொள்க. தலைவன் : முன்னிலையெச்சம்.
(84)    
  இறையோன் இறைவி தன்மை யியம்பல்:
தாளிணை மாந்தளி ரல்குல்பொற் றேரிடை சங்கைகொங்கை
கோளிணை கோலக் குரும்பைகை காந்தள் கொடிக்கரும்பார்
தோளிணை வேய்முகந் திங்கள்செவ் வாயிதழ் தொண்டையுண்கண்
வாளிணை வார்குழ லாய்வாணன் மாறையெம் மன்னுயிர்க்கே.

     (இ-ள்.)  வார்குழலாய்!     வாணனது     மாறைநாட்டிலிருக்கும்    எம்
மன்னுயிர்போல்வாட்கு  இலக்கணம்,   தாளிணை  மாவினது   தளிர்;   அல்குல்
பொன்னின் அலங்கரித்த தேர்; இடை உண்டு இல்லையென்னுங் சங்கை; கொங்கை கொத்தில்  இரண்டணைந்த  அழகார்ந்த குரும்பை;  கை காந்தள்;  பூங்கொடியும்
கரும்பும் குங்கும எழுத்தால் ஆர்ந்த தோளிணை வேய்;  முகம் திங்கள்;  சிவந்த வாயிதழ் கோவைக்கனி; மையுண்ட கண் வாளிணை; நீ யறிவாயாக என்றவாறு.

     சங்கை - ஐயம்.   கோள் - கொத்து;   1`கோட்டெங்கின்  குலை   வாழை`
என்புழி, கோள் கொத்தினை யுணர்த்தியவா  றுணர்க.  அன்றியும்,   2`வண்கோட்
பலவின்` என்புழியும், கோள் கொத்தினை யுணர்த்தியவாறுணர்க. கோலம் - அழகு.
கொடி - வல்லி.      `கொடிக் கரும்பு`      என்புழி,        உம்மைத்தொகை.
தொண்டை - கொவ்வைக்கனி. மன்னுயிர்: ஆகுபெயர்.
(85)    

1. பட்டினப்பாலை - 16.
2. மலைபடுகடாம் - 337.