|
|
காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல்: |
காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் என்பது அவ்வாறு கூறிய பாங்கியை நோக்கி, முதிர்ந்த அறிவினை யுடையாள் தலைவி, அவளை அவ்வாறு கூறற்பாலையல்லை என்று தலைவன் கூறல்.
|
| வருநீர் வனமுலை மங்கைநல் லாய்செங்கை வாணன்வையை தருநீர் மலிவயல் தஞ்சையன் னாளன்று தஞ்சமிலேன் அருநீர் நவையுறக் கண்மலர் நீர்தெளித் தாற்றினளால் இருநீர் நிலங்கொள்ளு மோவறி யானென்னும் இவ்வுரையே.
|
(இ-ள்.) அழகின்றன்மை நாட்குநாள் மிக்காய்த் தோன்றும் முலையையுடைய மங்கைப்பருவ நல்லாய் சிவந்த கையையுடைய வாணனது வையையாறு தரும் நீரான் மலிந்த வயலினையுடைய தஞ்சைநகர் போல்வாள் முன்பற்றுக்கோடில்லேன், பிறர் எய்தற்கு அரிதாகிய கல்வியறிவு வேட்கையாற் குற்றமுறும்போது, அக்குற்றந்தீரத் தனது கண்மலரிலுள்ள அருளாகிய நீரைத் தெளித்து ஆற்றினாளாதலால், அவளையறியாளென்று கூறிய இவ்வுரையைப் பெருநீர் சூழ்ந்த இவ்வுலகம் முறைமையென்று கொள்ளாது என்றவாறு. |
`வனநீர் வருமுலை` என மாறுக. மலிதல் - நிறைதல். தஞ்சம்- பற்றுக்கோடு. அருநீர் - அரிய கல்வியறிவு. நவை - குற்றம். நீர் - அருள். ஆற்றுதல் - தணித்தல். இருநீர் - பெருநீர். ஓகாரம் : எதிர்மறை. |
(91) |
பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல்: |
பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல் என்பது இவ்வாற கூறக் கேட்ட பாங்கி முன் நின் வேட்கை தீர்த்தாள் என்று கூறினையே, அவ்வாறு இன்னுங் கூடுக என்று கூறல். |
| செறிவளர் காவி வயற்றஞ்சை வாணன் சிறுமலைமேல் நெறிவளர் வார்குழல் நேரிழை யாளன்ன நிர்மையளேல் குறிவளர் காவின்முன் கூடிய வாறின்னுங் கூடுகநீ கறிவளர் சாரல்வெற் பாபிற ராலென்ன காரியமே.
|
(இ-ள்.) கறிக்கொடி வளருஞ் சாரலையுடைய வெற்பனே1 ஒழுங்காய் வளர்ந்த வார்ந்த குழலையுடைய நேரிழையாள் நின் வேட்கை தணிக்கும் அத்தன்மையாகிய குணமுடையாளேல், வளருங்காவி செறிந்த வயல் சூழ்ந்த தஞ்சைவாணன் சிறுமலை மேல் நீ கூடுங்குறி வளரப்பட்ட காவில் முன் கூடியவாறுபோல் இன்னுங் கூடுக. என்போலும் பிறரால் என்ன காரியம் என்றவாறு. |