|
|
(இ-ள்.) மானும் வெவ்விய விடமும் போலுங் கண்ணையுடைய பாங்கியானவள் யாம் இரந்து பின்னின்றே மாயின், ஒருகால் எம்மிடத்து மனமிளகும் என்று எண்ணங்கொண்ட நெஞ்சே! கலியாகிய கோடைசூழ்ந்த இம் மண்ணுலகின்மேல் கோடை வெப்பந் தணிய மழையும் மந்தாரமும் வந்தாற்போன்ற வாணன் தென்மாறை நாட்டில், நம்மைப் போல் இந்த மாந்தழையும் அழகுவாடத் தவஞ் செய்தது, யாம் என் செய்வோம் என்றவாறு. |
உழை - மான். காளம் - விடம். குழைதல் - இளகுதல். கவின் - அழகு. `மழையும் மந்தாரமும்` என்பதற்கு மேகமும் மந்தாரத் தருவும் என்று பொருளுரைப்பாரும் உளர். மழைபோல் உடனே வெப்பந் தணியாமையின் அது பொருளன்மை யுணர்க. `யாம் என் செய்வோம்` என்பது சொல்லெச்சம். |
(99) |
பாங்கி ஆற்றுவித் தகற்றல்: |
பாங்கி ஆற்றுவித்து அகற்றல் என்பது, இவ்வாறு கூறுதல் கேட்ட பாங்கி தலைவனை அஞ்சலை நாளை வா எனக் கூறி விடுத்தல். |
| சோலையில் வாழிளந் தோகையன் னாளைத் தொழுதிரந்திம் மாலையில் வாழி வரங்கொள்வல் யான்தஞ்சை வாணன்வெற்பா வேலையில் வார்துகி ரன்னவெய் யோன்வெயில் வெற்பின்மல்கும் காலையில் லாபின்னை யென்கைய தாகுநின் கையுறையே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பனே! சோலையில் வாழும் இளந்தோகை போல்வாளை யான் இவ்விரா முற்றுந் தாளிற் பணிந்து இரந்து வரமாக வேண்டிக் கொள்வன்; கடலில் நெடிய பவளம் போன்ற கதிரோனது கிரணம் வெற்பிலெல்லாம் நிறையுங் காலைப்பொழுதில் வா; வந்தாயேல், அப்போது நின் கையுறை என் கையதாகும் என்றவாறு. |
தோகை - மயில். வாழி : அசைநிலை. வேலை - கடல். துகிர் - பவளம். வெய்யோன் - சூரியன். வெயில் - கிரணம். மல்குகல் - நிறைதல். கையிலுறைதலின் கையுறையாயிற்று. |
(100) |
இத்துணையும் ஐந்தாநாட் செய்தி |
தலைமகன் கூற்றாயினவெல்லாம், `இரந்துபின்னிற்றற்கும் பாங்கி கூற்றாயின வெல்லாம், `சேட்படுத்தற்கும் உரியவாறு காண்க.
|