இரந்து குறை பெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல் என்பது, மற்றைநாட் காலையில் வந்த தலைமகன் இவளாற் காரியமின்றெனக் கருதி இரந்து குறைபெறாதாயினோம் என்று வருத்தமுற்று இனி நமக்குப் பொருளாவது மடலே யெனத் தன்னுள்ளே மதித்துக் கூறல்.
(இ-ள்.) நெஞ்சமே! பகைவர் தொழுந் தாளையுடைய முருகவேளை யொத்த வாணன் தென்மாறை வெற்பிடத்து ஆராவமுது போன்ற அழகிய சொல்லையுடைய மடவாருடைய முகத்திற்கு அழகாயார்ந்த குழையைத் தொட்ட மணிபொருந்திய பெரிய வேல்போன்ற விழிப்பார்வையானது தந்த வெவ்விய காமமாகிய பிணிக்கு மருந்தாவது மடலேறலே யன்றி வேறில்லை என்றவாறு.
எனவே, யாம் அது செய்யக் கடவேம் என்பதாயிற்று.
மடலேறலாவது - தலைவன் ஒவ்வாக் காமத்தால் பனங் கருக்காற் குதிரையும், பனந்தருவினுள்ளவற்றால் வண்டில் முதலானவும் செய்து அக்குதிரையின் மேலேறுவது. மடலேறுவான் திகம்பரனாள், உடலெங்கும் நீறுபூசிக், கிழி ஓவியர் கைப்படாது தானே தீட்டிக், கிழியின் தலைப்புறத்தில் அவள்பேரை வரைந்து கைப்பிடித்து, ஊர்நடுவே நாற்சந்தியில் ஆகாரம் நித்திரையின்றி, அக்கிழிமேற பார்வையும் சிந்தையும் இருத்தி,வேட்கை வயத்தனாய் வேறு உணர்வின்றி, ஆவூரினும் அழ மேற்படினும் அறிதலின்றி, மழை வெயில் காற்றான் மயங்காதிருப்புழி, அவ்வூரிலுள்ளார் பலரும் கூடி வந்து நீ மடலேறுதியோ? அவளைத் தருதும், சோதனை தருதியோ; என்றவழி இயைந்தானாயின், அரசனுக்கறிவித்து, அவனேவலால் அவன் இனைந்துனையத் தந்து மடலேறென்றவழி, ஏறும் முறைமை: பூளை, எலும்பு, எருக்கு இவைகளாற் கட்டிய மாலை யணிந்துகொண்டு அம்மாவிலேற, அவ்வடத்தை, வீதியில் ஈர்த்தலும், அவ்வுருளையுருண்டோடும் பொழுது, பனங்கருக்கு அறுத்த இடமெல்லாம் இரத்தந் தோன்றாது வீரியம் தோன்றின், அப்போது அவளை யலங்கரித்துக் கொடுப்பது; இரத்தம்கண்டுழி அவனைக் கொலை செய்து விடுவது. இவை புலவரால் நாட்டிய வழக்கென்று உணர்க.