கட
தஞ்சைவாணன் கோவை
119

 
காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல்:
     தொடை - மாலை. ஏகாரம்: ஈற்றசை. சூல்வளை - கருப்பங் கொண்ட சங்கு.
`எருக்கென்பு` என்புழி,  எண்ணும்மை  தொக்குநின்றது.   உரையாணி - உரையை
யறிவிக்குங் கருவி.
(104)    
தலைவன் தன்னைத்தானே புகழ்தல்:
    தலைவன் தன்னைத்தானே புகழ்தல் என்பது, இவ்வாறு எழுதல்  அரிதென்று
கூறிய பாங்கியை நோக்கி, யான் எழுத வல்லேன் எனத் தன்னைத்தானே புகழ்ந்து
தலைவன் கூறல்.
  நறையல ராவிரைப் போதிசை யாதிசை நான்முகத்தும்
மறையல ராவந்த மான்மகன் யான்தஞ்சை வாணன்வையைத்
துறையல ராவியங் காவியங் கண்ணி துணிந்துசொல்லுங்
குறையல ரார்குழ லாட்கினித் தீரக் குறையில்லையே.

    (இ-ள்.) நறையலரென்னும்   அவ்   விரைப்போதிலிசைந்து    திக்குக்கொரு
முகமாகும் நான்முகத்திடத்தும் வேதம் விரிவாக வந்த மாலுக்கு மகன் யானாதலால்,
தஞ்சை வாணன் வையைத் துறையினும், விரிவாகிய  வாவியினும், நீரிற்றோன்றிய
காவிப் பூப்போலுங் கண்ணையுடையாய் நீயெழுதப்படாதென்று துணிந்து சொல்லுங்
குறையலரார்ந்த  குழலையுடையாட்கு  இன்றெழுதப்படாதென்று  விடத்தக்க  தாய
குறையில்லை என்றவாறு.

    இன்னுமொரு பொருள், நறையலரென்னும் அவ்விரைப் போதிலிசைந்து நான்கு
திசையிடத்தும்  களவு  வெளியாக  வந்த  ஆசைகொண்ட   புருடன்  யானெனச்
சிலேடை  வகையால்,  பிரமன்   யானெனத்   தோன்றியவதனால்   எழுதற்கரிய
தின்றென்று கூறியவாறாயிற்று.

நறை - மணம்,   அவ்விரை:   ஆவிரை யெனச் சுட்டு நீண்டது.    ஆவயினான
என்றாற்போல.

பிரமன்மேல்    ஏற்றுங்கால் - இசையா - இசைந்து.   மறை - வேதம்.   அலரா
வந்த - விரிவாக வந்த. மால் - மாயோன். மகன் - பிரமன்.

தலைவன்மேல்  ஏற்றுங்கால் - இசையா - இசையாது.   நான் முகம் - நான்கிடம்.
மறை - மறைகள்.       அலராவந்த - வெளியாக   வந்த.      மால் - ஆசை.
மகன் - புருடன்.  ஆவி - வாவி.  அம் - நீர்.  காவி - நீலப்பூ.   அம்: சாரியை;
அழகு. கண்ணி:    அண்மை விளி.    தீர்தல் - விடல்.    1`தீர்தலுந் தீர்த்தலும்
விடற்பொருட் டாகம்` என்பதனாற் கொள்க. குறை - குற்றம். குறை - குறைவு.
(105)    

1. தொல். சொல். உரியியல் - 22.