கட
தஞ்சைவாணன் கோவை
120

 
பாங்கி அருளியல் கிளத்தல்:
     பாங்கி  அருளியல்  கிளத்தல்  என்பது,  அவ்வாறு தலைவன் கூறக்கேட்ட
பாங்கி மடலேறத் தகாது என அருண்முறைமை கூறுதல்.

செயலார் குடம்பையிற் செந்தலை யன்றிற் சினையுளபைங்
கயலார் வனவெண் குருகின்வண் பார்ப்புள கைக்கடங்கா
மயலார் களிற்றண்ணல் வாணன்தென் மாறைவை யைந்துறைவா
இயலா தருளுடை யார்க்கென்று மாமட லேறுவதே.

    (இ-ள்.) பாகன்  கைக்கடங்கா  மதத்தால்  மயக்கமார்ந்த   களிற்றரசனாகிய
வாணன் தென்மாறைநாட்டில் வருகின்ற வையைத் துறைவனே,
பனையில் புட்களாற்
செய்யப்பட்ட   செயலார்ந்த   வட்டில்  சிவந்த   தலையினையுடைய  
அன்றில்
முட்டைகளுள;    பசிய    கயலார்வனவாகிய   வெண்ணிறக்குருகின்  
 வளவிய
பார்ப்புக்களுள;  ஆதலால்,
 அருளுடையார்க்கு   எக்காலத்தும் மடன்மா ஏறுதல்
பொருந்தாது என்றவாறு.

     எனவே, மடலேறத் தகாது  என அருள்முறைமை கூறுதலால்,  பனைமடலை
வெட்டலும், முட்டைகளைச்  சிதைத்தலும்,  பார்ப்புக்களை  வதைத்தலும்  ஆகிய
பாவங்கள் சூழ்தலின், அருளுடையோர்க்கு ஆகாது என்றவாறாயிற்று.  மடற்கூற்று
அதிகாரப்பட்டு வருதலின் பனையென வருவிக்கப்பட்டது.

     செயல் - தொழில்.  குடம்பை - கூடு;  `செந்தலையன்றில்`  வண்ணச்சிலைச்
சொல்.

  1`அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்.`

என்னுஞ் சூத்திரத்தான் உணர்க.

சினை - முட்டை. குருகு - நாரை. பார்ப்பு - பிள்ளை.

  2`பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை`

என்பதனான் உணர்க. மயல் - மயக்கம். களிறு - யானை. இயலாது - பொருந்தாது.
அண்ணல் - வேந்தன்.
(106)    

1. தொல். சொல். கிளவியாக்கம் - 26.
2. தொல். பொருள். மரபியல் - 4.