கொம்பனையார் மறுத்தகாலையில் தோடணிந்த முகமும், குரும்பைபோன்ற கொங்கையும், உன் கண்ணுமுடைய கரும்பு அனையாரைக் கொண்டு எனச் சிலேடையால் ஒரு பெண்ணாகத் தோன்றியவாறுஉணர்க.
`மறுத்தாற் குறைமுடி` யெனவே,குறிப்பான் மறாளெனத் தோன்றி நிற்றலில், அவன் உயிரைத் தாங்கிக்கொண்டு நிற்கும் நிலைமையாயிற்று. முன்கூறிய செய்யுட்களில், `வெற்பன் சிலம்பன் பொருப்பன்` என்று குறிஞ்சிநிலத்துத் தலைமகனாகக் கூறி, இவ்விடத்தில் `கடற்றுறைவா` என்று நெய்தனிலத்துத் தலைமகனாகக் கூறியவதனான், முன்கூறிய தலைவனேயோ இவன் வேறேயோ எனின், அத்தலைவன்தானே இவன். ஐந்திணையில் எத்திணை கூறினும் அத்திணைக்குரிய கருப்பொருளாற் கூறப்படும்; ஆயின். இக்கிளவி எத்திணைப்பாற்படுமெனின், நெய்தற்பாற்படும். அஃதென்னை யெனின், பனை நெய்தனிலத்துக் கருப்பொருளாதலான். `கடற்றுறைவா` எனக் கூறியவாறு. பனை நெய்தனிலத்துக் கருப்பொருளானவாறு என்னை யெனின், குறிஞ்சி கற்பூமியாதலான் பனைக்காதது: பாலைக்குத் தீந்து போவதல்லது பயிராவதில்லை; முல்லை, வரகு சாமை முதிரை முதலாயின உணவும், நிழலுமாக இருத்தலின் பனைக்காகாது; மருத நிலத்திற்கு வாவியும், குளனும், கமுகு, வாழை, செந்நெல், கரும்பு முதலியனவும் நீர்ச்சார்பாதலின், அந்நிலத்திற்கும் பனையாகாது; மணல் நிலத்திற் பயிராதலால் நெய்தனிலத்துக் கருப்பொருளாயிற்று.