கட
123
பாங்கியிற் கூட்டம்

 
பாங்கி தலைமகள் செவ்வியருமை செப்பல்:
      பாங்கி   தலைமகள்  செவ்வியருமை  செப்பல்   என்பது,   தலைமகளது
காலப்பருவத்தின் அருமை கூறுதல்.

  ஏடா ரலங்கல் இலங்கிலை வேல்வெற்ப ஏழுலகும்
வாடாமல் வந்தருள் வாணன்தென் மாறையில் வல்லியன்னாள்
சூடாள் குவளையு முல்லையஞ் சூட்டுஞ் சுனையும்பந்தும்
ஆடாள் தனக்கென்கொ லோஅடி யேன்சென் றறிவிப்பதே.

     (இ-ள்.) பூவார்ந்த  மாலை  யணிந்து   இலங்கப்பட்ட   இலை   போலும்
வேலையுடைய வெற்பனே! ஏழுலகும் வாடாமைக்குக் காரணமாக  வந்தருளப்பட்ட
வாணன்    தென்மாறை     நாட்டில்    வல்லிபோல்வாள்    குவளைப்போதும்
முல்லையஞ்சூட்டும் சூடாள், சுனையும் பந்தும் ஆடாள், அவள் தனக்கு அடியேன்
போய் அறிவிப்பது எவ்வாறு என்றவாறு.

      ஏடு : ஆகுபெயர்.    அலங்கல் - மாலை.       இலங்குதல் - ஒளிர்தல்.
இலைவேல் : உவமைத்தொகை. `குவளையு முல்லையஞ் சூட்டுஞ் சூடாள்` என்றும்,
`சுனையும் பந்து மாடாள்`    என்றும்,     ஒருவினை   கொண்டு     முடிந்தது.
முல்லையஞ்சூட்டு - முல்ாலைப்பூவாற் சுட்டிபோலச் செய்து நெற்றியிற்   கட்டுவது.
`தனக்கு` என்புழிச் சுட்டு வருவிக்க. கொல்லும், ஓவும் அசைநிலை.
(110)    
தலைவன் செவ்வியெளிமை செப்பல்:
      தலைவன்   செவ்வி  யெளிமை  செப்பல்  என்பது,  செப்புதற்குப்  பதம்
எளிதெனத் தலைவன் கூறுதல்.

  தேன்வந்த வாயிதழ்ச் சேயிழை யாயிளஞ் செவ்விநவ்வி
மான்வந்த வாள்விழி வஞ்சிக்கு நீதஞ்சை வாணன்வெற்பில்
யான்வந்த வாசென் றியம்புதி யேலவர் யாவரென்னாள்
தான்வந்த வாவுட னேநின்னை யாரத் தழீஇக்கொளுமே.

      (இ-ள்.) தேன்போன்ற   சொல்வந்த  வாயிதழையும்  செய்ய   பூணையும்
உடையாய்! இளமையழகாகிய  நவ்வி   மான்போல்  வந்த  வொளி  பொருந்திய
கண்ணையுடைய  வஞ்சிக்குத்  தஞ்சை  வாணன்  வெற்பில்  யான்  வந்தவாறு நீ
சென்று  கூறுதியேல்,  அவர்  யாவரென்று  கூறாது,  தான் ஆசையுடனே வந்து,
நின்னை ஆகத்தோடு ஆகம் பொருந்தத் தழுவிக்கொள்வாள் என்றவாறு.

      தேன் - ஆகுபெயர்.  நவ்வி மான்: இருபெய  ரொட்டுப்  பண்புத்தொகை.
`மான்வந்த வாள்விழி`: உவமைத்தொகை.   வந்தவா - வந்தவாறு.    `நீ சென்று`,
எனவும், `தான் அவாவுடன் வந்து` எனவும் இயையும்.
(111)