|
|
இப்பூந்தழையானது, ஒலியொடு கூடித் தெளிந்த கடன்மருங்கிற் சூழ்ந்த உலகேழிடத்தும் பழவினைதான் வலிதென்று சொல்வதனை இப்போது விளங்கச் செய்தது என்றவாறு.
|
எனவே, கையுறை யேற்றவா றாயிற்று. இதனுள் கருப்பொருள் மயங்கியவாறு. |
| 1`உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே` |
என்னுஞ் சூத்திரவிதியால் உணர்க.
|
புடை - மருங்கு. ஊழ்வினை - பழவினை. வயக்கியது - விளக்கியது. கலி, இலாங்கலி தலைக்குறையாய் விகாரப்பட்டு நின்றது: தெங்கில் ஒரு வேறுபாடு. `கலி தெங்கும்` என்புழி, |
| 2`எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயின்` |
என்னுஞ் சூத்திரவிதியால், உம்மை தொக்கு நின்றது. உம்மைகள் எண்ணன்கண் வந்தன. கதலி - வாழை. அடவி - காடு. பூந்தழை - பூவொடு கூடிய தழை. |
(115) |
கிழவோனாற்றல்: |
கிழவோனாற்றல் என்பது, தலைவன் துயர்மாறிக் கூறுதல்.
|
| மைப்போ தணிதொங்கல் வாணனொன் னாரென வல்வினையேற் கப்போ தடைந்த அருந்துயர் நீங்கி யரும்பியபொற் செப்போ திளமுலை யாணகை வாண்முகத் திங்களைக்கண் டிப்போ திளகிய தாலிந்து காந்தங்கொ லென்னெஞ்சமே.
|
(இ-ள்.) குவளைப் போதால் இயன்ற மாலையையணிந்த வாணன் பகைவரையொத்த வல்வினையேனாகிய எனக்கு நென்னலடைந்த அரிய துன்பம் நீங்கித் தோன்றிய பொற்செப்பு உவமையாயோதிய இளமுலையையுடைய பாங்கியது மகிழ்ச்சி ஒளிபொருந்திய முகத் திங்களைக் கண்டு, இப்போது மகிழ்ச்சியால் இளகியதாதலால், என்னெஞ்சம் சந்திரகாந்தம் என்னும் சிலை என்றவாறு. |
எனவே, ஈரமின்றிப் புலர்ந்த தன்னெஞ்சம் பாங்கி முகத் திங்களைக் கண்டு, இப்போது மகிழ்ச்சி யென்னும் நீருண்டாதலின், `இந்து காந்தம்` என்று கூறியது.
|
மைப்போது - குவளைப்போது. ஒன்னார் - பகைவர். அரும்பல் - தோன்றல். கொல் : அசைநிலை.
|
|
1. தொல். பொருள். அகத்திணையியல் - 13. |
2. தொல். சொல். இடையியல் - 36. |