|
|
ஆல்: அசை. புரத்தல் - காத்தல். பொய்த்தல் - உண்மை நீக்கல். கரத்தல் - மறைத்தல். `தஞ்சைவாணன் பொதியிலில் என்னுயிராகிய காரிகை` எனவும், `செவ்விதழ் பரக்கின்ற` எனவும் மாறுக. வருந்துழி வருந்தியும், மகிழ்ந்துழி மகிழ்ந்தும், இறந்துழி இறந்தும் இயைவதாகலின், `என்னுயிராகிய காரிகை` என்று கூறினார். |
(121) |
பாங்கி கையுறை புகழ்தல்: |
| சூடத் தகுவன வல்லதெல் லாம்படி சொல்லினுந்தாம் வாடத் தருவன வல்லநல் லாய்தஞ்சை வாணன்வெற்பர் தேடத் தகுவன வல்தல் லாத சிலம்பினுள்ளார் நாடத் தகுவன வல்லகல் லார நறுந்தழையே.
|
(இ-ள்.) நல்லாய்! உலகமெல்லாஞ் சொல்லினும் சொல்லா தொழியினும் மலையிடத்துத் தோன்றிய இச் சந்தன நறுந்தழை சூடத்தகுவன வல்லது, தாம் வாடத் தகுவன அல்ல; அன்றியும், தஞ்சைவாணன் வெற்பர் தேடத்தகுவன வல்லதல்லாத மலையினுள்ளார் நாடத்தகுவன அல்ல என்றவாறு. |
`படியெல்லாம்` என மாறுக. `சொல்லினும்` என்புழி உம்மை எதிர்மறையாகலின், `சொல்லாதொழியினும்` என்பது, வருவிக்கப்பட்டது. `அல்ல` என்பது அஃறிணைப் பன்மைவினைக்குறிப்பு முற்றுச் சொல். நாடல் - கருதல். கல் - மலை. ஆரநறுந்தழை - சந்தனத்தழை. |
இவற்றுள் பாங்கி கூற்றாயினவெல்லாம், `குறைநயப்பித்தற்`கும், தலைவி கூற்றாயினவெல்லாம், `மறுத்தற்`கும், உரியவாறு உணர்க. |
(122) |
தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல்: |
தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல் என்பது, பாங்கி தலைவனது வேட்கையால் கொண்ட துயர்நிலையைத் தலைவிக்குக் கூறல். |
| வனையுங் குழல்வஞ்சி வாணன்தென் மாறை வரைக்களிறு தினையுந் தழையும் பிடியொடு மேய்ந்து தெளிந்தவின்னீர் சுனையுண்ட சோக நிழற்சோக நீங்கித் துயில்வதுகண் டெனையுங் கடைக்கணி யாவினை யாநிற்பர் ஏதிலரே.
|
(இ-ள்.) அலங்கரிக்குங் கூந்தலையுடைய வஞ்சி! நம்புனத்து அயலாராய் வந்தோர், வாணன் தென்மாறை வரையிடத்துக் களிறு பிடியோடு தினையும் தழையும் மேய்ந்து, சுனையிடத்துத் தெளிந்த இனிய நீரையுண்டு, துன்பம் நீங்கி, அசோகமரத்து நிழலின்கீழ்த் துயில்வதனைப் பார்த்து, என்னையும் கடைக்கண்ணால் நோக்கி வருந்தா நிற்பர் என்றவாறு. |