|
|
`வஞ்சி ஏதிலர்` எனவும், `களிறு பிடியொடு` எனவும், `சுனைத்தெளிந்த வின்னீர்` எனவும், `உண்டு சோக நீங்கி` எனவும் மாறுக. வனைதல் - அலங்கரித்தல். வஞ்சி : அண்மை விளி. இனையா நிற்பர் - வருந்தாநிற்பர். ஏதிலர் - அயலார். கடைக்கணித்தல் - கடைக்கண்ணால் நோக்குதல். `பிடியொடு துயிலுங் களிற்றைக் கண்டு என்னையும் நோக்காநிற்பர்` எனவே நீ இதனை யறிந்திலை யெனக் குறிப்பால் அறிவித்தவாறாயிற்று. |
(123) |
மறுத்தற் கருமை மாட்டல்: |
மறுத்தற்கு அருமை மாட்டல் என்பது, இவ்வாறு கூறிய சொற்கட்கு விடை யின்மையால், இனி அவர் வரின் என்னால் மறுத்தற்கு அரிதெனப் பொருத்திக் கூறுதல். மாட்டல் - பொருத்துதல்.
|
| கையுந் தழையுமுன் காண்டொறுங் காண்டொறுங் கட்டுரைத்த பொய்யுந் தொலைந்தன பூந்தழை போலரி போர்த்துநஞ்சும் மையுங் கலந்துண்ட வாள்விழி யாய்தஞ்சை வாணன்வெற்பர் மெய்யுந் துவண்டதென் னான்முடி யாது வெளிநிற்கவே.
|
(இ-ள்.) செவ்வரியை மேற்கொண்டு நஞ்சும் மையும் கலந்துண்டவாள்போல் விழியாய்! இவ் வனத்திலுள்ள மாந்தழைகளெல்லாம் நமக்குக் கொண்டுவந்து கொண்டுவந்து வாடியெறிதலால், அப் பூந்தழைகள் தொலைந்தாற்போல், அவர் கையுந் தழையும் எதிரே காணுந்தோறும் காணுந்தோறும் யான் உறுதிச்சொல்லா யுரைத்த என்னிடத்திலுண்டான பொய்யெல்லாந் தொலைந்தன; அன்றியும், தஞ்சைவாணன் வெற்பர் மெய்யும் அலைந்தலைந்து துவண்டதாதலால், இனி அவர் வரின் வெளியாய் நிற்க என்னால் முடியாது என்றவாறு.
|
எனவே, அவர் வரின் மறையவேண்டும் என்பதாயிற்று. கட்டுரைத்தல் - உறுதிச்சொற் கூறுதல். அரி - செவ்வரி. |
(124) |
தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறுதல்: |
தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் என்பது, தலைவன் எண்ணுங் குறிப்பு நம் பக்கல் இரப்பவன் போற்றோற்றவில்லை, வேறு நினைப்பானாகத் தோன்றியதென்று ஒழுங்குபடக் கூறுதல்.
|
| விடையான் மிசைவரு மேருவில் லானொடு மேழிவென்றிப் படையா னொடும்வெம் பகைகொள் வதோபகல் போலுமெய்ம்மை உடையா னுயர்தஞ்சை வாணனொன் னாரென வொல்கியநுண் இடையாய் பிறிதுகொ லோவறி யேன்வெற்ப ரெண்ணுவதே.
|