கட
135
பாங்கியிற் கூட்டம்

 
       கொள்ளக்கிடத்தலானும்,  ஈண்டு,  `குருக்கத்தி`  என்று வருவிக்கப்பட்டது.

துணி - துண்டம்:  ஆகுபெயர்.  மாமணி - மாணிக்கம்.   திகழ்தல் - ஒளிவிடுதல்.
பாசறை   கடற்கும்,  மாணிக்கம்  கதிரோனுக்கும்  உவமையாதலின்  பண்புவமை.
`மலர்மயிலை மார்பில் வைத்த வாணன்`   எனவே   பூவைநிலை.    பயிலிடம் -
ஈண்டு விளையாடு மிடம். குறியிடம் - பகலிற்கூடும் இடத்து அடையாளம்.
(130)    
பாங்கி குறியிடத் திறைவியைக் கொண்டு சேறல்:
  நாமாவி மூழ்கி நறுமலர் குற்றுநந் தாவனத்துத்
தேமா விளந்தளிர் செவ்வண்ணங் கொய்து சிலம்பெதிர்கூய்
வாமா னெடுங்கண் மடந்தைநல் லாய்தஞ்சை வாணன்வெற்பிற்
பூமா தவிப்பந்தர் வாய்விளை யாடுகம் போதுகவே.

     (இ-ள்.) தாவுமான்போல்  நெடிய  கண்ணையுடைய  மடந்தை    நல்லாய்!
தஞ்சைவாணன் வெற்பில் நாம் வாவியினிடத்து மூழ்கி, நறிய மலர்களைக் கொய்து,
நந்தவனத்துச்   செவ்வண்ணமாகிய   தேமாவினது   இளந்தளிரைக்    கொய்து,
சிலம்பெதிர்  கூவி,  பூவொடு  கூடிய  குருக்கத்திப்  பந்தரில்  விளையாடுவோம்.
செல்வாயாக என்றவாறு.

     ஆவி - வாவி. குற்று - கொய்து. வாமான் - தாவு மான். மாதவிப் பந்தர் -
தினைப்புனத்தயலில் சோலையில் மாதவி படர்ந்து மலர்ந்து நாற்றம் வீசச்  சுற்றும்
புதல் சூழ்ந்து  அகத்திருந்தோர்  புறத்தில்  வருவோர்க்குப்  புலனாகாத  மறைவு
வாய்த்திருப்பதோர் இடம்.
(131)    
பாங்கி தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்கல்:
  கண்சாயல் கையுருக் கொண்டுதன் வேன்மயில் காந்தள்வள்ளி
எண்சாய வென்றனை யென்றுசெவ் வேளிவ ரும்பவளம்
வண்சா யொசிக்கும் வயற்றஞ்சை வாணன் மலயமராத்
தண்சாயை நின்றணங் குந்தைய னீநிற்க சாரலிலே.

     (இ-ள்.) தையலே, கண்ணுஞ் சாயலுங் கையும்  உருவுங்  கொண்டு,   தனது
வேலும்  மயிலுங்  காந்தளும் வள்ளியும் ஒப்பிலையென்றெண்ணிய  முருகவேளின்
எண்ணத்தைத்  தாழ்வுபட  வென்றனையால்,  ஏறிப்படரும்    பவளம்   வளவிய
கோரையை   யசைக்கும்   வயலையுடைய  தஞ்சைவாணன்   மலயத்  தினிடத்து,
மராமரத்துத்  தண்ணிய  நிழலிலே  நின்று  என்னுடன் நீ  வந்தாயாகில், நின்னை
அம்முருகவேள்  வருத்துமாதலால்,  இச்சாரலில்  இவ்விடத்தில் நிற்பாயாக என்று
பாங்கி யகன்றாள் என்றவாறு.