|
|
எண்ணும்மை தொக்குநின்று, நிரனிறைப்பொருள் வந்தவாறுணர்க. இவர்தல் - ஏறுதல். சாய் - கோரை. ஒசித்தல் - அசைத்தல். சாயை - நிழல். சாரல் - மலைப்பக்கம். |
(132) |
இறைவி இறையோனிடத் தெதிர்ப்படுதல்: |
| முயங்கிய நூபுரப் பங்கயத் தாளு முலைசுமந்து தயங்கிய நூலிடை தானுமென் போலத் தளர்வுறுமிங் கியங்கிய வாறென் மனத்திரு ணீக்கவென் றேதுணிந்தோ வயங்கிய சீருடை யான்வாணன் மாறை மணிவிளக்கே. |
(இ-ள்.) விளங்கிய புகழை யுடையோனாகிய வாணன் தென்மாறை நாட்டு மணிவிளக்குப் போல்வாய்! நூபுர முயங்கிய பங்கயம் போன்ற தாளும், முலையைச் சுமந்து தள்ளாடிய நூல் போன்ற இடைதானும் என்னைப் போலத் தளர்வுறும்; இவ்விடத்துச் சஞ்சரித்தவாறு என்மனத்துன்பத்தை நீக்கவென்று துணிந்தோ சொல்வாயாக என்றவாறு. |
`நூபுரமுயங்கிய பங்கயத்தாள்` என இயையும். நூபுரம் - சிலம்பு. தயங்கல் - தள்ளாடல். இயங்கல் - சஞ்சரித்தல். ஏகாரம் : ஈற்றசை. ஓகாரம்: வினா. வயங்குதல் - விளங்குதல். சீர் - கீர்த்தி. விளக்கு: ஆகுபெயர். தலைவியை விளக்கு என்று கூறினமையான் மனத்துன்பத்தை இருள் என்று கூறியது. இருள்: ஆகுபெயர். |
(133) |
புணர்ச்சியின் மகிழ்தல்: |
| தருந்தாரு வஞ்சுங் கொடையுடை யான்தஞ்சை வாணனின்சொல் செருந்தார் பசுந்தமிழ்த் தென்வரை மேற்செம்பொன் மேருவெற்பால் கருந்தாரை நஞ்சுமிழ் வாசுகி யால்வெண் கடல்கடைந்து வருந்தா அமுதனித் தாள்வல்ல ளாமிம் மடக்கொடியே. |
(இ-ள்.) கேட்டவை பலவுந் தருந் தாருவும் அஞ்சப்பட்ட கொடையை யுடையானாகிய தஞ்சைவாணன் இனிய புகழையும் செருந்திமரச் சோலையையும் பசிய தமிழையுமுடைய பொதிய மலைமேல், செம்பொன் மேருவெற்பால், கரிய தாரையாய் நஞ்சை யுமிழப்பட்ட வாசுகி யென்னும் பாம்பால், வெண்மை நிறம்பொருந்திய கடலைக் கடைந்து, வருந்தாத அமுதை யளித்தாளாதலால், இம் மடக்கொடி வல்லளாம் என்றவாறு. |
தருந்தாரு - கற்பகம். தென்வரை - பொதியமலை. தாரை - நீர் வரும் வழி; சலதாரை என்றாற்போல. வாசுகி - கடல் கடைந்த பாம்பு. வெண்கடல் - பாற்கடல். இவ்வாறு வருத்தப்படாமல் அமுதம் ஈந்ததினால், `வல்லள்` என்று கூறியது. வல்லள்: உயர்திணை யொருமைவினைக் குறிப்புமுற்று. |
(134) |