|
|
புகழ்தல்: |
| மயனார் விதித்தன்ன மாமதில் சூழ்தஞ்சை வாணன்வெற்பில் பயனார் பயோதரப் பாவையன் னீர்பசும் பொற்குழைதோய் நயனார விந்தத்து நஞ்சுதும் வாயிதழ் நல்லமுதம் அயனார் படைத்தில ரேலடங் காதவ் வரனுக்குமே.
|
(இ-ள்.) தெய்வத் தச்சனார் விதித்தது போன்ற அரிய செயலாகிய பெரிய மதில் சூழ்ந்த தஞ்சைவாணன் வெற்பில் இன்பப் பொருளார்ந்த முலையையுடைய சித்திரப்பாவை போல்வீர்! பசிய பொன்னாற் செய்த குழையைத் தொடும் நயனமாகிய தாமரை யிலிருக்கும் நஞ்சானது அடங்குமாறு நும் வாயிதழூடு நல்லமுதம் அயனார் படையாமற் போனாராகில், முன்பு கடலிற் பிறந்த நஞ்சை யடக்கிய அவ்வரனார்க்கும் அடங்காது என்றவாறு. |
பயன் - இன்பப் பொருள். பயோதரம் - முலை. தோய்தல் - தொடுதல். `நயினாரவிந்தம்` ஏகதேசவுருவகம். இதழமுதம் உண்டு விடந்தணிந்தா னாதலால் இவ்வாறு கூறியதென்று உணர்க. மயன் - தெய்வத்தச்சன். |
(135) |
தலைமகளைத் தலைமகன் விடுத்தல்: |
தலைமகளைத் தலைமகன் விடுத்தல் என்பது தலைமகளைத் தலைமகன் ஆயக்கூட்டத்திற் செல்லவிடுதல்.
|
| நேயம் புகலிட மின்றிநின் பால்வந்த நின்றதுபோல் ஆயம் புகல வடைந்தரு ணீயடை யாதமன்னர் வாயம் புகவில் வணக்கிய வாணன்தென் மாறைநன்னீர்த் தோயம் புகரிணை வேல்விழி யாய்நின் துணையுடனே.
|
(இ-ள்.) சரணென்று வந்தடையாத பகைமன்னரிடத்து அம்புகளுதிர வில்லை வளைத்த வாணன் தென்மாறை நாட்டுள்ள நல்ல நீரிலே தோய்த்துப் பதஞ்செய்த அழகிய புகர்நிறத்தையுடைய இணைவேல்போலும் விழியாய்! நீ யன்பு சொல்வதற் கிடமில்லாது நின் பக்கலிலே வந்து நின்றதுபோலச் சூழப்பட்ட ஆயக்கூட்டம் தங்களன்பைச் சொல்லத்தக்கதாக நின்பாங்கியுடனே நீ அடைந்தருள்வாயாக என்றவாறு. |
நேயம் - அன்பு. நேயம் புகழ்வதற்கு இவள்போலும் வேறொருவரின்மையால், இவளிடத்து வந்து சூழ்ந்தது போலும் என்று வறியவாறுணர்க. வாய் - இடம். அம்பு உக - அம்பு உதிர. புகர் - இரத்தக்கறை. |
(136) |