கட
தஞ்சைவாணன் கோவை
144

 
வல்ல   வாணனாகிய  வயல்சூழ்ந்த  தஞ்சை  வேந்தனை  வாழ்த்தல்  செய்யாத
பகைவரறிவு போலும் என்றவாறு.

    எனவே, காலமிடனறியாது மதிகெட்டுக் கூறுவர் பகைவர்; அவரறிவையொக்கும்
கட்டுரை கூறுவா ரறிவு என்றவாறாயிற்று.

`பூவலர்வாவி` வினைத்தொகை. புன்மை - இழிவு.  கடம் - மதம்.  மதுகை - வலி.
வியன் - விரிவு.
(146)    
தலைவி பாங்கியொடு பகர்தல்:
     தலைவி பாங்கியொடு பகர்தல் என்பது, வெறுப்பால் முன்னிலைப் புறமொழி
கேட்ட பாங்கி தலைவியை யுபசரித்தலால் வெறுப்பு நீங்கிப் பாங்கியொடு பகர்தல்.

  முலையார் முயக்கினு மல்லா விடத்தினு மூரிமுந்நீர்
அலையா ரமுதமு நஞ்சமும் போல அணங்கனையாய்
தொலையாத வின்பமுந் துன்பமுங் காட்டுவர் தூங்கருவி
மலையா சலத்தமிழ் வேர்வாணன் மாறைநம் மன்னவரே.

     (இ-ள்.) அணங்கனையாய்!  ஒலிக்கும்  அருவியையுடைய  பொதியமலையிற்
பிறந்த தமிழை யாராய்ந்த வாணன் மாறைநாட்டு நம் மன்னவர், முலைபொருந்திய
புணர்ச்சியினும் பிரிவினும், பெருமைபொருந்திய  முந்நீராகிய கடலிடத்துப்  பிறந்த
அமுதும் நஞ்சும்போலத் தொலைவில்லாத இன்பமும் துன்பமும் காட்டுவாராதலால்
இரண்டினும் 1அல்லராயிருந்தார் என்றவாறு.

     ஆர்தல் - பொருந்துதல்.   அலையார்   என்புழி  ஆர்தல் - தோன்றுதல்.
தூங்கருவி - ஒலிக்குமருவி.  `வாண்மலைந்  தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க`
என்னுந்  தொல்காப்பியச்  சூத்திரவுரையாற் காண்க. மலையாசலம் - பொதியமலை.
`அமுதமும் நஞ்சமும் போல`  என்பதனால்,  இன்பத்தினும்  துன்பம் மிக்கு என்று
கூறியவாறாயிற்று. என்னை,

  2`இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது`


     என்பதானுணர்க.
(147)    

1. (பாடம்) வல்லவராயிருந்தார்.
2. குறள் : படர்மெலிந்திரங்கல் - 6.