கட
147
ஒருசார் பகற்குறி

 
தோழி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல்:
       தோழி  சிறைப்புறமாகச்  செறிப்பு  அறிவுறுத்தல்  என்பது,    தலைவன்
சிறைப்புறமாகக் குறியிடத்து வரத் தோழி தங்களுக்குள்ள செறிப்பை  அறிவுறுத்துக்
கூறுதல். சிறைப் புறம் - வேலிப் புறம்.

  1`சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை`

     என்பதானுணர்க. செறிப்பு - கானவர் தினைகொய்யப் புனத்தின் நீங்கி  இல்
வந்திருத்தல்.

  தொடைக்கணி யார்தடந் தோளவர் கேளலர் தோகையன்னார்
உடைக்கணி யாந்தழை கொய்யா ருழவ ருடைத்ததெண்ணீர்
மடைக்கணி யார மிடுந்தஞ்சை வாணன் வரையின்முன்போல்
கடைக்கணி யார்கணி யார்நம்மை நாளைக் கருங்கணியே.

     (இ-ள்.) கரிய   கண்கணையுடையாய்!   மாலைக்கு   அழகார்ந்த   பெரிய
தோளினையுடையார் நமக்கு இனி யுறவல்லர்; மயில் போன்ற  ஆயக்கூட்டத்தாரும்
அரையில் உடுத்தற்கு அழகார்ந்த தழையை இனிக் கொய்யார்கள்;  உழவருடைத்த
தெண்ணீர் வயல் மடையை  அணியப்பட்ட  முத்தினாலடைக்குந்  தஞ்சைவாணன்
வரையிடத்து நாம் தழைகொய்ய 2வந்தோம் என்று  அச்சத்தா  னோக்கி  நிற்கும்
வேங்கையார் நாளை நம்மை முன்போற் கடைக்கண்ணாற் பாரார் என்றவாறு.

எனவே, குறவர் தினைகொய்ய வந்தனர், யாம் இன்று ஊர்க்கு ஆயக்கூட்டத்துடன்
போவோம் என்று செறிப்பறிவுறுத்தவாறாயிற்று.

கேளலர் - உறவலர். உடைக்கு - உடுத்தற்கு. ஆரம் - முத்து.  கடைக்கணியார் -
கடைக்கண்ணாற்  பாரார்.   சிறப்பும்மை   தொக்கது.  கணியார் - வேங்கையார்;
உயர்சொற்கிளவி.

  3`ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய யுயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல`

      என்னுஞ்   சூத்திரவிதியானுணர்க.    கடைக்கணித்தல் - கடைக்கண்ணால்
நோக்குதல்.
(151)    

1. குறள். வாழ்க்கைத் துணைநலம் - 7.
2. (பாடம்) (1) வருவோம்.
3. தொல். சொல். கிளவியாக்கம் - 27.