|
|
கங்குலிடத்துச் சங்கம் முத்தங்களையீன்று வயலினுயர்ந்த வரம்பிலே துயிலும் தஞ்சைவாணன் வரையிடத்துக் கயலேறு போன்ற மையுண்ட கண்ணையுடைய நின்பக்கல் வரத் தலைவர் விரும்பினர் என்றவாறு.
|
புயலேறு - இடி. பொங்குதல் - மிகுதல். உளை - மயிர். மீதெழல் - மேலே சிலிர்த்தல். போதகம் - யானை. தேர்தல் - தேடுதல். இயலல் - இயங்குதல். ஏறு - சிங்கவேறு. `இடித்தவுடன் மயிர்சிலித்துச் சிங்கம் யானையைத் தேடும்` என்றது, இடியென்றறியாது களிறு பிளிறியதென்று கருதித் தேடியவாறென்று உணர்க. `சங்க முத்த மீன்று` எனவும், `கயலே றனைய வுண்கண்` எனவும் மாறுக. கயலேறு - மீன்களிற் சிறந்தது. தலைவி : முன்னிலையெச்சம். |
(169) |
நேரா திறைவி நெஞ்சொடு கிளத்தல்: |
நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தல் என்றது, இவ்வாறு கூறக்கேட்ட தேலைவி இயையாது தன் நெஞ்சொடு கூறுதல்.
|
| விடவார் கணைவிழி மெல்லியல் மாதரை மேதினியோர் மடவா ரெனுமுரை வாய்மைநெஞ் சேதஞ்சை வாணன்வெவ்விற் கடவா ரணத்திரி கங்குனங் கண்ணன்ன காதலர்முட் பிடவார் சிறுநெறி வாய்வரல் வேண்டினள் பெண்ணணங்கே.
|
(இ-ள்.) நெஞ்சே! தஞ்சைவாணன் பகைவரைப் போல் மதம்பொழியும் யானைதிரியுங் கங்குலில் முட்பிட வார்ந்த சிறுநெறியிடத்து நம் கண்போற்சிறந்த காதலர் வர அணங்கு போலும் பெண் விரும்பினளாதலான், விடம் பொருந்திய நெடிய கணைபோலும் விழியையும் மெல்லிய இயலினையும் உடைய மாதரை உலகினுள்ளோர் மடவார் என்று கூறும் உரை வாய்மை தானே என்றவாறு.
|
`கணைவிழி`: உவமைத்தொகை. மடவார் - அறிவிலார். வாய்மை - உண்மை. கடவாரணம் - மதவாரணம். பிடவு - ஒரு மரம். சிறு நெறி - அருநெறி. `பெண்ணணங்கு`: பின்மொழி நிலையல். |
(170) |
நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல்: |
நேரிழை பாங்கியொடு நேர்ந்து உரைத்தல் என்பது, நெஞ்சொடு கூறிய தலைவி பாங்கியொடு உடன்பட்டுக் கூறுதல்.
|
| வெங்குல வாரண மேற்றவர்க் கேநல்கி வேற்றரசர் தங்குல வாழ்வு தவிர்த்தருள் வாணன் தமிழ்ச்சிலம்பில் கங்குல வாவினர் காதல ராயிற் களிபயந்த கொங்குல வாவலர் சூழ்குல லாயென்கொல் கூறுவதே.
|