|
|
(இ-ள்.) வெவ்விய கூட்டமாகிய யானைகளை இரப்போர்க்குக் கொடுத்துப் பகைவேந்தர்தங் குலத்தினுள்ளோர் வாழ்வெல்லாந் தவிர்த்தருள் வாணன் தமிழ்ச்சிலம்பிடத்து வண்டுகட்குக் களிப்பைக் கொடுத்த மணம் வாடாத மலர்சூழ்ந்த குழலாய்! காதலர் இரவுக் குறியைக் காதலித்தாராயின் யான் மறுவார்த்தை கூறுவது என் என்றவாறு.
|
எனவே, நேர்ந்தமை யாயிற்று.
|
குலம் - கூட்டம். தமிழ்ச்சிலம்பு - பொதியமலை. களி - களிப்பு. `களிபயந்த கொங்கு` என்றதனால் வண்டு வருவித்து உரைக்கப்பட்டது. கொங்கு - மணம். உலவா - வாடா. |
(171) |
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக் குரைத்தல்: |
| பரவாத வண்ணம் பரவியும் பாதம் பணிந்துநெஞ்சம் கரவாத பொன்னைநின் காரண மாகக் கயிலையென்றே வரவா தவனஞ்சும் வெண்மா விகைத்தஞ்சை வாணன்வெற்பா இரவாத வண்ணமெல் லாயிரந் தேனிவ் விரவிடையே.
|
(இ-ள்.) வெண்சாந்து பூசியவதனாற் கயிலாயமலையென்று கதிரோன் வருதற் கஞ்சும் மாளிகையுடைய தஞ்சைவாணன் வெற்பனே! நெஞ்சத்தில் நின் காதலை மறையாத பொன்னை நின் பொருட்டாகப் புகழாத வண்ணமெல்லாம் புகழ்ந்தும். பாதங்களைப் பலகாற் பணிந்தும், இவ்விடையிருளின்கண் அவள் மனம் இயைதற்கு இரவாத முறைமையெல்லாம் இரந்தேன் என்றவாறு. |
பரவுதல் - புகழ்தல். கரத்தல் - மறைத்தல். பொன் - திருமகள். ஆதவன் - கதிரோன். வண்ணம் இரண்டும் முறைமை. |
(172) |
குறியிடை நிறீஇத் தாய்துயி லறிதல்: |
குறியிடை நிறீஇத் தாய்துயில் அறிதல் என்பது, பாங்கி தலைவனைக் குறியிடத்து நிறுத்தித் தாயினது துயிலை யறிதல்.
|
| மாகந் தரியலர்க் கீந்தருள் வாணன்தென் மாறைவெற்பில் மேகந் தருமின் னிடையன்ன மேவிரை நாண்மலர்வேய் நாகந் தழுவுங் குடம்பையின் வாய்நடு நாளிரவில் சோகந் தவர்வில வாய்த்துயி லாததென் தோகைகளே.
|
(இ-ள்.) தன்னைச் சேராத பகைவர்க்கு வானுலகத்தை அளித்தருள் வாணன் தென்மாறை வெற்பிடத்து மேகங்கொடுக்கும் மின்போன்ற இடையையுடைய அன்னமே! மணநாண்மலர் பொருந்திய புன்னாகத்தைத் தழுவுங் குடம்பையிடத்தில் இரவில் இடையாமத்து மயில்கள் துன்பத்தை நீங்காவாய்த் துயிலாதது என் என்றவாறு. |