|
|
| நம்பால் நலனுண்ட நம்பா தகர்தந் நகர்வினவித் தம்பா லுடன்சென்று சார்குவ மோதரி யாரைவென்று வம்பார் கழல்புனை வாணன்தென் மாறை வளரும்வஞ்சிக் கொம்பா கியமருங் குற்கரும் பாமொழிக் கோமளமே.
|
(இ-ள்.) தரியாரை வென்று வீரத்தால் கச்சார்ந்த கழலை யணிந்த வாணன் தென்மாறைநாட்டு வளரும் வஞ்சிக் கொம்பு போன்ற மருங்குலையும கரும்புபோன்ற மொழியினையும் உடைய கோமளமே! நம்மிடத்து இன்பத்தை யுண்ட நம்முடைய பாதகர் இருக்கும் நகரம் வினவி இருவரும் உடன் சென்று அவர் தம்பாற் சேர்குவம் நீயஞ்சலை என்றவாறு. |
தரியலர் - பகைவர். வம்பு - கச்சு. ஓகாரம்: அசைநிலை. |
(212) |
பாங்கி இறைவனைப் பழித்துரைத்தல்: |
| வறியார் புகழ்தஞ்சை வாணன்தென் மாறை மடந்தையன்னாள் அறியாள் துயர்முன் னறிந்தவர் தாமத னாலழலின் பொறியா ருயிர்வெம் பணிமா மணியும் புதையிருள்கூர் நெறியா ரருள்பெற நாநடு நாளிடை நீந்துதுமே.
|
(இ-ள்.)மிடியுடையார் புகழப்பட்ட தஞ்சைவாணனது தென் மாறை நாட்டு மடந்தைபோல்வாள் முன்னர் வேட்கை நோயை யறியாள், அவர்தாம் அறிந்தவதனால் நெருப்பின் பொறி போன்ற உயிர்ப்பையுடைய வெய்ய நாகம் ஈன்ற மாணிக்கத்தையும் புதைக்கப்பட்ட இருள்செறிந்த நெறியில் வரப்பட்டவரது அருளைப்பெற நாம் இடை யாமமாகிய வெள்ளத்திடையே நீந்துவம் என்றவாறு.
|
அவரது அருளைப்பெறவேண்டி நாம் இறந்துபடாது துன்பப்படுவோம் எனவே, இயற்பழித்த லாயிற்று. வறியார் - மிடியார். உயிர் - உயிர்ப்பு. பணி - பாம்பு. மாமணி - மாணிக்கம். புதைத்தல் - மறைத்தல். நெறி - வழி. நடுநாள் - இடையாமம். நீந்தல் - துன்பமுறல். |
(213) |
இறைவி இறையோன் தன்னை நொந்நியற்பட மொழிதல்: |
இறைவி......... இயற்பட மொழிதல் என்பது பாங்கி இயற்பழித்தது பொருளாய்த் தலைவி இயற்பட மொழிதல்.
|
| புணரா விரகமும் போகா இரவும் புணர்முலைமேல் இணரார் பசப்பும் பிறவுமெல் லாமிருள் வர்ந்தறல்போல் வணரார் குாற்பிறை வாணுத லாய்தஞ்சை வாணன்வெற்பர் உணரா திருப்பது வேறொன்று மல்லநம் மூழ்வினையே.
|