கட
தஞ்சைவாணன் கோவை
188

 
 
துகிலையுடையாய்,  யான்  வருந்தும்  இந்த   நோயைத்   தலைவர்க்கு   இன்று
உரைப்பாருண்டாயின் நமக்கு உயிர்  எய்தலாம்; சொல்வார்க்குப் பயன் யாதெனில்,
அவர்  தங்களுக்கு  நடக்குந்  திரையையுடைய   கடல்  சூழ்ந்த  புவியினிடத்தில்
வளரும் புகழெய்தலாம் என்றவாறு.

    வரை - பொதியமலை.   பால் - இடம்.    நுரைப்பால்: உம்மைத்  தொகை.
ஊர்திரை: வினைத்தொகை.  திரை: ஆகுபெயர்.   தரை - நிலவுலகம். நுண்டுகில்,
1`குண்டுகனை பூத்த வண்டுபடு கண்ணி:  என்றாற்போல,   ஒற்றுமை   நயம்பற்றி,
நுண்ணிய நூலாற் செய்த துகில் என்று கொள்க.
(217)    
துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல்:
    துன்புறல்  பாங்கி  சொல்லெனச்  சொல்லல்  என்பது,  யான்  துன்புறலைத்
தலைவர்க்கு நீ சென்று சொல்லெனத் தலைவி கூறியதற்குத்  தலைவியை நோக்கிப்
பாங்கி சொல்லல்.

 ஒல்லென வேயென் னுறுதுயர் தாமும் உணரும்வண்ணம்
சொல்லென நீயிது சொல்லியென் பேறுன் துயரமெல்லாம்
வல்லென வேகொண்ட கொங்கையர் வேள்தஞ்சை வாணன்வெற்பில்
அல்லென ஆர்கழ லாயறி யாரல்லர் அன்பருமே.

    (இ-ள்.) விரைவினுள்  இது  விரைவென்ன  என்னுடைய   மிக்க   துயரைத்
தலைவர்தாமும்  உணரும்  வண்ணம் என்னைச் சொல் லென்று நீ இது சொல்லிப்
பெறும்  பயன்  யாது?  சூதென்று  சொல்ல  ஒப்புமைகொண்ட  கொங்கையர்க்கு
வேளாகிய  தஞ்சைவாணன்  
 வெற்பில்   இருளென்று   சொல்லப்   பொருந்திய
குழலினை யுடையாய்; உன் துயரமெல்லாம் அன்பரும் அறியாரல்லர் என்றவாறு.

ஒல்லெனல்: விரைவின்கண்  வந்த சொல்.  உறுதுயர் - மிக்க துயர்.  வல் - சூது.
அல் - இருள். ஆர்ந்த - பொருந்திய.
(218)    
அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி:
     அலர் பார்த்து உற்ற அச்சக்கிளவி என்பது, உற்றாருஞ் சொல்லும் அலரைக்
கருதி அதனாலுற்ற அச்சத்தால் தலைமகள் கூறுஞ் சொல்.

  மலருந் தொடைவஞ்சி வஞ்சக மாதரு மாரனும்வாய்
அலருந் தடங்கை யலருந் தொடாநிற்ப வஞ்சிநெஞ்சம்
பலரும் புகழ்தஞ்சை வாணர் பிரானைப் பணியலர்போல்
புலரும் பெயருங்கண் ணீர்புல ராது புலரினுமே.


1. திருமுரு - 199.