கட
189
வரைதல் வேட்கை

 
     (இ-ள்.) மலருமாலையுடைய       வஞ்சிபோல்வாய்,         ஊரிலுள்ள
வஞ்சமாயிருக்கப்பட்ட   மாதரும்   மாரனும்   வாயலரும்   பெரிய   கையலருந்
தொடாநிற்ப  அஞ்சி  நெஞ்சமானது,   பலரும்  புகழ்   பெற்ற   தஞ்சைவாணர்
குலத்துச்  சிறந்தானைப்  பணியாதார்   போலப்   புலரும்;  நெஞ்சு   புலரினும்
பெயரப்பட்ட கண்ணீரானது புலராது என்றவாறு.

வஞ்சி: அண்மைவிளி. மாரன் - மன்மதன். வாயலர் - தூற்றுஞ் சொல். கையலர் -
மாரன் அம்பாக எய்யும் மலர்.   பெயர்தல் - நிலைவிட்டுப் பிரிதல்.  `நெஞ்சமும்
புலரும்` எனவும், `புலரிம் பெயருங் கண்ணீர்` எனவும் இயையும்.
(219)    
ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி:
ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி என்பது, வழியைப் பார்த்து அவ்வழி ஏதத்தால்
உண்டாகிய அச்சத்தால் தலைவி கூறுஞ் சொல். பார்த்தல் - கருதல்.

  அரியுங் கரியும் பொருநெறிக் கோர்துணை யாயவர்மேல்
சொரியுந் திவலை துடைக்கவென றோகுழை தோய்ந்துநஞ்சும்
வரியும் பயில்கண்ணி வாணன்தென் மாறைநம் மன்னர்வந்து
பிரியும் பொழுதெல்லி வாய்பினை யேன்மனம் பின்செல்வதே.

     (இ-ள்.) குழையைத்  தொட்டு  நஞ்சும்  வரியும்  நெருங்கும்   கண்ணாய்!
வாணன் தென்மாறையிலிருக்கும் நம் மன்னர் இரவின் கண் வந்து பிரியும்பொழுது
பாவியேன் மனம் அவரைப் பிரியாமற் றொடர்ந்து செல்வது சிங்கமும்  யானையும்
பொருகின்ற  வழிக்கு  ஒரு  துணையாய்  அவர்மேற்   சொரியப்பட்ட   மழைத்
திவலையைத் துடைக்கவென்றோ, சொல்வாயாக என்றவாறு.

அரி - சிங்கம்.    கரி - யானை.     கண்ணி: அண்மைவிளி.    எல்லி - இரவு.
நஞ்சு - விடம். வரி - செவ்வரி. பயில்கண் - நெருங்குங்கண்.
(220)    
காமமிக்க கழிபடர் கிளவி:
     காமமிக்க  கழிபடர்  கிளவி  என்பது, வேட்கை மிக்குச் சிறப்பச் சிந்தித்துச்
சொல்லுங் சொல்.

     இக்கிளவிச்  செய்யுட்குக்  கருத்து: கடல்,  கானல்,  பொழில், விலங்கு, புள்
இவற்றை நோக்கித் தலைவி இரங்கிக் கூறல்.

  1மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் கான்கழி காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் வீர்மன்னு மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது வோநன்மை செப்புமினே.

1. கோவையார் - 174.