|
|
(இ-ள்.) விரும்பப்பட்ட எப்பொருளையும் கொடுக்கும் பொருட்குப்போய் முடிவாகி மீண்ட எனது தேரிலே பாகன் செலுத்தும் பரிமுன்னாக விரைந்தோடும் முகில்காள், திங்களைத் தீண்டும் கொடி கட்டிய மதில்சூழ்ந்த தஞ்சைவாணனைச் சேரா தவர்போல் நெருங்கும் பசலைநிறம் மெய்யெங்கும் போர்த்திருப்பவர் தமக்கு எனது வரவினைச் சென்று சொல்வீர் என்றவாறு.
|
வேண்டல் - விரும்பல். `பொருட்போய்` என்புழி, நான்கனுருபு தொக்கது. முற்றல் - முடிதல். தூண்டல் - செலுத்தல். பரி - குதிரை. துனைவு - விரைவு. 1`கதழ்வும் துனைவும் விரைவின் பொருள` என்னும் சூத்திர விதியானுமுணர்க. இந்து - திங்கள். சேரலர் - பகைவர். தீண்டல் - நெருங்குதல். சேரலருந் துன்பத்தால் வேறுபட்டிருப்பர். மாதரும் துன்பத்தால் மெய்ந்நிறம் வேறுபட்டிருப்பாராதலால், உவமை கூறியவாறு உணர்க. |
(275) |
பாங்கி வலம்புரிகேட்டு, அவன் வரவறிவுறுத்தல்: |
பாங்கி வலம்புரி கேட்டு அவன் வரவு அறிவுறுத்தல் என்பது, பாங்கி வலம்புரியோசையைக் கேட்டத் தலைவன் வரவை அறிவுறுத்தல். |
| பொருகின்ற செங்கயல் போல்விழி யாய்பண்டு போயநின்கைக்
குருகின் றணித்திறை கொள்வது காண்கநங் கொண்கர் பொற்றேர்
தருகின்ற சங்கத் தருவன்ன வாணன் தமிழ்த்தஞ்சைவாய்
வருகின்ற தென்றுமுன் னேயோகை கூறும் வலம்புரியே.
(இ-ள்.) ஒன்றோடொன் றெதிர்க்கின்ற செங்கயல் போலும் விழியாய், முன்னாள் கழன்று போய நின்கைவளை இன்று புனைந்து தங்குவது அழகுதக; நம் கொண்கர் ஏறிவரும் பொற்றேரானது, தருகின்ற சங்கநிதியையும் கற்பகத் தருவையும் ஒத்த வாணன் தமிழ்த்தஞ்சை வீதிவாய் வருகின்றதென்று முன்னே வலம்புரிச் சங்கமானது மகிழ்ச்சி கூறா நின்றது, நீ கேட்பாயாக என்றவாறு. |
குருகு - வளை. இறைகொள்வது - தங்குவது. காண்க - அழகுதக. |
| 2"நிலத்தில முலையி னார்த நெடுங்கணா னோக்கப் பெற்றும் கைத்தலந் தீண்டப் பெற்றும கனிந்தன மலர்ந்த காண்க"
|
என்னும் சிந்தாமணிச் செய்யுளில், `காண்க` என்னுஞ் சொற்கு, `அழகுதக` என்று நச்சினார்க்கினியர் கூறிய உரையானுமறிக. கொண்கர் - தலைவர். ஒகை - உவமை. |
(276) |
|
1. தொல். சொல். உரியியல் - 19. |
2. சிந்தா. விமலை - 19. இவ்விசேடவுரை அச்சிட்டபிரதியில் காணப்படவில்லை. |