கட
247
வரைவு கடாதல்

 
தலைமகன் மறுத்தல்:
  பாரோ முலைவிலை யென்பர்நின் கேளிரென் பரல்கிளைவாழ்
ஊரோ அணியதன் றொண்டொடி யாய்விந்தை யுண்கண்களோ
தாரோ வளரும் புயன்தஞ்சை வாணன் தரியலர்போல்
யாரோ தனிநடப் பாரருங் கானம் இவளுடனே.

(இ-ள்.) ஒள்ளிய வளையினையுடையாய்! நின் சுற்றத்தார் பாரை முலைவிலையென்று
சொல்வாரோ?  உடன்  கொண்டு  போதற்கு  என்  சுற்றத்தார்  வாழுகின்ற  ஊர்
அணித்தன்று; அன்றியும்,  போவாமென்னில்  சய  மாதின்  மையுண்ட கண்களோ
தாரோ  வளரும்  புயத்தையுடைய  தஞ்சைவாணனுக்குத்   தரியல்போல,   அரிய
காட்டில் இவளுடன் தனியாய் நடப்பவர் யார் என்றவாறு.

     எனவே,  தரியலர்  செல்லுங்  கானத்தில்  ஏனோர்  சேறல்  அரிது என்று
கூறியவாறாயிற்று.  பாரோ  என்புழி  ஓகாரம்  என்பர்  என்பதனோடு   கூட்டுக;
அவ்வோகாரம்  வினா.  ஊரோ யாரோ என்புழி ஓகாரம்  இரண்டும்  அசைநிலை.
கண்களோ, தாரோ என்புழி ஓகாரமிரண்டும் எண்ணின்கண் வந்தன.
(306)    
அவளுடன் படுத்தல்:

     அவள் உடன்படுத்தல் என்பது, பாங்கி தலைவனை உடன் படுத்தல்.

  சுருளோய் குழலுஞ் சுணங்கேய் முலையுஞ் சுமந்துகற்புப்
பொருளே யெனச்சுரம் போதுமப் போது புகழ்வெயிலான்
மருளேய் கலியிருண் மாற்றிய வாணன்தென் மாறையினின்
அருளே யொழியவுண் டோநிழ லாவ தணங்கினுக்கே.

     (இ-ள்.) சுருள்  பொருந்திய  குழற்பாரமும்  சுணங்கியைந்த  முலைப்பாரமும்
சுமந்து,  பொருளாவது  கற்பேயெனத்  தெளிந்து,  சுரத்திற்  செல்லும்போது  தன்
புகழுருவாகிய வெயிலினாலே மயக்கம் பொருந்திய  கலியாகிய  இருளை  மாற்றிய
வாணன்  தென்மாறை  நாட்டிலிருக்கின்ற    அணங்கினுக்கு    நிழலாவது   நின்
அருளையே   நிழலென்று    கொள்ளுவதல்லாது    வேறொன்றை   நிழலென்று
கொள்ளப்படாது என்றவாறு.

     சுருள் - கடைகுழற்சி.  சுணங்கு - மாமைநிறம்.  உம்மை: எண்.  பொருளே
என்புழி  ஏகாரத்தைக் கற்பொடு கூட்டித் தேற்றப் பொருண்மை யுரைக்க. மருள் -
மயக்கம். அருளே என்புழி ஏகாரம் ஈற்றசை.
(307)