|
|
தலைவி நாணழிவிரங்கல்: |
மாமை - குருதிப் புள்ளி நிறம். `மாவைவேற்படைவாணன்` என்று பாடமோதிப், பெருமையுங் கூர்மையுமுடைய வேற்படையெனப் பொருள் கூறுவாருமுளர். `கூர்பொருந்திய` என இயையும். அரமான என்புழி உவமைத்தொகை. புரமான - புரம் போல. ஆற்றல் - பொறுத்தல்.
|
| 1`ஆற்றுவா ராற்றல் பசியாற்றல்` |
என்றார் பிறரும். சுரம் - வழி. ஆறுதல் - வெப்பந் தணிதல். எல்லை - அளவு. |
(317) |
உவந்தலர்சூட்டி யுண்மகிழ்ந்துரைத்தல்: |
உவந்து அலர் சூட்டி உள்மகிழ்ந்து உரைத்தல் என்பது, தலைமகளை மகிழ்ந்து அவள் கூந்தற்கு அலரைச்சூட்டி, அதனால் பரவச மகிழ்ச்சியடைந்து கூறுதல்.
|
உவகை அறிவொடு கூடியது; மகிழ்ச்சி அறிவழிந்தது. என்னை,
|
| 2`உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு`
|
என்னுங் குறட்குப் பரிமேலழகர் உரையானும் உணர்க.
|
| அடிமலர் போற்றவும் போற்றியன் பாலிவ ளாய்முடிக்கியான் கடிமலர் சூட்டவுங் காட்டிய தர்ற்கள்வர் காய்ந்தெறியும் துடிமலர் சீர்க்கெதிர் கூகை யிரட்டுஞ் சுரத்திடையோர் வடிமலர் வேற்படை யான்வாணன் மாறையென் மாதவவே.
|
(இ-ள்.) கள்வர் சினந்து அடிக்குந் துடியின்கண் விரிவாகிய தாளவோசைக்கு எதிராகக் கூகை யொலிக்கும் காட்டிடை ஒப்பற்ற கூர்மை விரிந்த வேற்படை யுடைய வாணன் தென்மாறை நாட்டிலிருக்கின்றது என்னுடைய மாதவம், இவளடி மலரைப் போற்றவும், போற்றி அன்பால் இவளாய்ந்து முடித்த கொண்டைக்கு யான் மணமலரைச் சூட்டவும் காட்டியது என்றவாறு.
|
போற்றல் - ஈண்டு வருடல்; வருடி - வருத்தந் தீர்த்து. கடிமலர் - மணமலர். காய்தல் - சினத்தல். எறிதல் - அடித்தல். துடி - பாலை நிலத்துப் பறை. மலர்தல் - விரிதல். சீர் - தாளவோசை. இரட்டுதல் - ஒலித்தல். சுரம் - காடு. வடி - வடித்தற்றொழில். ஆல்: அசை. |
(318) |
|
1. குறள். ஈகை - 5. |
2. குறள். புணர்ச்சி விதும்பல் - 1. |