|
|
அச்சத்தன்மைக்கு அச்சமுற்றிரங்கல்: |
அச்சத்தன்மைக்கு அச்சமுற்று இரங்கல் என்பது, நற்றாய் தலைவியது வெருவுந்தன்மையை நினைந்து தான் அச்சமுற்று இரங்குதல்.
|
| நாள்மா தவிமலர் நாறிருங் கூந்தல் நடந்தவழிக் கோள்மா குமிறுங் கொடுங்குரல் கேட்டொறுங் கூர்ங்ணையால் வாள்மா முனைவென்ற வாணன்தென் மாறை மணிவரைவேய்த் தோள்மாவெருவுங்கொல்லோவென்றென் ஆருயிர் சோர்கின்றதே. |
(இ-ள்.) குருக்கத்தியினது முறுக்கவிழ் மலர்மணக்குங் கரிய கூந்தலையுடையாள் நடந்த பாலைவழியில் கொலை செய்யும் விலங்குகள் குமிறப்பட்ட கொடிய குரலைக்கேட்குந்தோறும், கூயி கணையினால் வாள்பிடித்துவரும் பெரிய பகைமையை வென்ற வாணன் தென்மாறை நாட்டில் இருக்கின்ற மணி விளையும் வரையிடத்து உண்டாகிய வேய் போலுந் தோளை யுடைய திருப்போல்வாள், அஞ்சுமோ என்று என் அரிய உயிர் வாடுகின்றது என்றவாறு. |
`மாதவி நாள் மலர்` என இயையும். மாதவி - குருக்கத்தி. கோள் - கொலை. மா - விலங்கு. குமிறுதல் - சினந்து முழங்குதல். கேட்குந் தோறும் என்னுஞ் சொல் கேட்டொறும் என விகாரப்பட்டு நின்றது. முனை - பகை. வெருவுதல் - அஞ்சுதல். சோதல் - வாடல். இவை ஐந்தும் மனமருட்சிக்குரியவாமாறு காண்க. |
(338) |
கண்டோர் இரக்கம்: |
| நொந்துங் கலுழ்த்துந் துணைவிய ராற்றலர் நோக்கொடின்சொல் தத்துங் கவையுந் தணந்துசென் றாளெனத் தாள்பணியார் மைத்துங் கதமுங் கடிந்தருள் வாணன்தென் மாறையன்னாள் பந்துங் கழங்குமெல் லாங்கண்டு வாடும் பயந்தவளே. |
(இ-ள்.) தம்மிடத்துப் பார்க்குங் குளிர்ந்த பார்வையோடு இனியசொல் தந்தனையும் அயலார் தூற்றும் அலரையும் விட்டு நீங்கிச் சென்றாளென நொந்தும் கலுழ்ந்தும் துணைவியராற்றலர், தாள்பணியாதார் வலியையும் சினத்தையும் போக்கியவாணன் தென்மாறையன்னாள் விளையாடிய பந்தும் கழங்கும் மற்று முள்ளன யாவற்றையும் கண்டு பயந்தவள் வாடும் என்றவாறு. |
கலுழ்தல் - அழுதல். `நோக்கொடு இன்சொற் றந்ததற்கு நொந்தும் கவையைத் தணந்ததற்குக் `கலுழ்ந்தும் ஆற்றல் ராயினார்` என நிரனிறையாய்ப் பொருள் கொள்க. தந்ததும் என்பது தந்தும் என விகாரப்பட்டு நின்றது. கண்டோர் - மாதரார். |