281
வரைவு கடாதல்

 
 உவலைப் பதுக்கை மூரம்புசெல் லாம லுலகமங்கை
தவலைத் தவிர்த்த தமிழ்த்தஞ்சை வாணன் தரியலர்போல்
கவலக் கடத்துச் சிலைத்திரை கோலிக் கடும்பகழித்
துவலைப் படைக்கடல் தோன்றல்பொற் றேர்வங்கஞ் சூர்கின்றதே.

(இ-ள்.) தோன்றலே!   தழைகளொடு கூடிய  குறுந்தூறுகள் மூடி  மேடுசெல்லாமல்
நிலமங்கையது  வளங்கெடுதலைத்  தவிர்த்த  தமிழ்த்  தஞ்சைவாணன்   பகைவர்
செல்லுங்   கவர்வழியில்,  வில்லாகிய  திரைகளை யுண்டாக்கிக் கடிய அம்பாகிய
திவலைகளைச்  சிதறிப்  படையாகிய  கடல் நினது பொற்றேராகிய மரக்கலத்தைச்
சூழ்கின்றது என்றவாறு.

     உவலை - தழை;
 1`உவலைக் கூரை யொழுகிய தெருவில்`

என்னும்  முல்லைப்  பாட்டிற்கு  நச்சினார்க்கினியர், `தழையாலே வேய்ந்த கூரை`
என    எழுதிய   புரையானுமுணர்க.   பதுக்கை - சிறுதூறு.    முரம்பு - மேடு.
தவல் - கேடு.   கவலை - கவர்வழி. கடம் - காடு. திரை - அலை. பகழி - அம்பு.
வங்கம் - மரக்கலம். இஃது இயைபுருவகம்.
(363)    
தலைமகளைத் தலைமகன் விடுத்தல்:
 ஆறலை வெஞ்சிலைக் கானவ ரேலென்கை யம்பொன்றினால்
நூறலை யஞ்சல னுண்ணிடை யாய்நும ரேலவர்முன்
சேறலை யஞ்சுவல் செல்வல்பைம் பூகச் செழும்பழுக்காய்த்
தாறலை தண்டலை சூழ்தஞ்சை வாணன் தமிழ்வெற்பிலே.

     (இ-ள்.) நுண்ணிடையாய்!   ஈண்டுக் கூடிவருகின்றோர் வழியை அலைக்கும்
வெய்ய   சிலையையுடைய   வேடராகில்   என்   கையிற்பிடித்த   ஓரம்பினால்,
புறப்பொருளில்   தும்பைத்திணையின்   நூழிலாட்டு  என்னுந்  துறை  தோன்றக்,
கொன்று   குவித்தலை   அஞ்சேன்;   நும்   சுற்றத்தவரே   யாகில் அவர் முன்
செல்லுதலை   அஞ்சுவேன்;   ஆதலான்,  நீ வாரலை;  பசிய கமுகினது செழித்த
பாக்குத்தாறு   காற்றாலசையுஞ்    சோலை   சூழ்ந்த   தஞ்சைவாணன்   தமிழ்
வெற்பிடத்தில் யான் செல்வேன் என்றவாறு.

ஆறலைத்தல் - வரிபறித்தல்.     நூறல் - கொல்லுதல்.     `நுமரேல் அஞ்சவல்`
என்றது.  நுமரெதிர்ந்துழி   அவரைக்  கொலை  செய்ய வேண்டும்! செய்துழி  நீ
துயருழத்தி: ஆதலால், `அஞ்சுவல்` என்றான். தாறு - குலை. தண்டலை - சோலை.
நூழிலாட்டு என்பது, ஒருவன் பலரைக் கொன்று குவித்தல்; என்னை.

1. முல்லைப் பாட்டு - 29.