கட
299
வரைவு கடாதல்

 
தலைவி நெய்யாடிய திருளை சாற்றல்:
தலைவி  நெய்யாடியது  இருளை  சாற்றல் என்பது, தலைவி புதல்வனைப் பயந்து
நெய்யாடியதனைப் பாங்கி தலைவற்குச் சொல்லல்.

  மலர்புரை யேர்கொண்ட வாட்கணெங் கோமங்கை வாணன்தஞ்சைப்
பலர்புகழ் பாலற் பயந்துநெய் யாடினள் பாங்கெவர்க்கும்
அலர்பரை நீடொளி யாடியுட் பாவையன் னாட்குளநீர்
புலர்புன லுரவென் னோதிரு வுள்ளமிப் போதுனக்கே.

(இ-ள்.) மலரை   யொப்பாய்  அழகுகொண்ட  ஒளிபொருந்திய  கண்ணையுடைய
எமக்கரசாகிய மங்கை, வாணன் தஞ்சையில் பலரும் புகழப்பட்ட பாலனைப் பெற்ற
நெய்யாடினள்; பாங்கியர் எவர்க்கும் அலரையொப்பாய் நீண்ட  வொளியையுடைய
கண்ணாடியுட்  பாவைபோன்றாளிடத்து உள்ளன்பு  புலர்ந்த  புனலூர!  இப்போது
உனக்குத் திருவுள்ளம் யாதோ என்றவாறு.

`பலர் புகழ்`  என்புழிச்  சிறப்பும்மை  விகாரத்தாற்  றொக்கது.   பயந்து - ஈன்ற.
பாங்கு - பாங்கியர்.  `பாங்கிலன் றமியாளிடந் தலைப்படலும்`  என்பதனானுணர்க.
ஆடி - கண்ணாடி.       `அன்னாட்கு`    என்புழி,     வேற்றுமை   மயக்கம்.
உளநீர் - உள்ளன்பு.   ஓகாரம் ஐயம்; என்னை,  பரத்தையர்  சேரிக்குச் செல்லத்
திருவுளமோ, ஈண்டு உறையத் திருவுள்ளமோ என ஐயந்தருதலான் எனக் கொள்க.
(389)    
தலைவன் தன் மனத்துவகை கூறல்:
 மையணி வேல்விழி வாணுதல் கூர்ந்தது வாணன் றஞ்சைக்
கொய்யணி நாண்மலர்க் கொம்பரன் னாள்குழ விப்பயந்து
நெய்யணி மேனியி லையவி பூண்ட நிலையறிந்தே
கையணி வால்வளை யைக்கண்ட நாளினுங் காதன்மையே.

(இ-ள்.) மையணிவேல்போன்ற  விழியையும்  வாணுதலையும்  உடையாய்! வாணன்
தஞ்சையிற்  கொய்யப்பட்ட  அழகாகிய  நாண்மலரையுடைய  கொம்புபோன்றவள்
புதல்வனைப் பெற்று  நெய்யணிந்த  மேனியில்  வெண்சிறுகடுகு பூண்ட நிலைமை
யறிந்து  கையிலணிந்த  ஒள்ளிய  வளையினை  யுடையாளைக்  கண்ட  நாளினும்
காதற்றன்மை மிகுந்தது என்றவாறு.

வேல்விழி வாணுதல்: அன்மொழித் தொகை.  கூர்தல் - மிகுதல்.  அணி - அழகு.
நாண்மலர் - முறுக்கவிழ்மலர். குழவி - மகவு.

  1`குழவியு மகவு மாயிரண் டல்லவை
கிழவ வல்ல மக்கட் கண்ணே`

என்பதனானுணர்க. பயந்து - பெற்று. ஐயவி - வெண்சிறுகடுகு

1. தொல். பொருள். மரபியல் - 23.