|
|
| 1`நெய்யோ டையவி யப்பியை துரைத்து` |
என்பதனானுணர்க. குழவி என்புழி இரண்டனுருபு தொக்கது; வால்வளை: ஆகுபெயர். காதன்மை - ஆசைத்தன்மை. வாணுதல். அண்மைவிளி. |
(390) |
தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றல்: |
| ஏரார் புதல்வன் புறந்தனன் வாழிய வென்னுமுன்னே வாரார் வளமனை வந்துநின் றார்கங்குல் வாணன்தஞ்சை நீராவி நீல நெடுங்கண்மின் னேநின்னை நீப்பதல்லால் தேரா தொழிகுவ ரோபெரி யோர்தஞ் சிறுவனையே.
|
(இ-ள்.) நெடுங்காலம் வாழ்க, அழகார்ந்த புதல்வன் பிறந்தன னென்று சொல்வதற்கு முன்னே வருந் தகுதியில்லார் கங்குலிடத்து வளவிய நம் மனையில் வந்து நின்றனர்; வாணன் தஞ்சையில் நீர் பொருந்திய வாவியிற் பூத்த நீலம் போன்ற நெடிய கண்ணையுடைய மின்னே! நின்னைப் பிரிவதேயல்லது, பெரியர் தம் சிறுவனைத் தேர்ந்தறியாது விடுவரோ என்றவாறு. |
ஏர் - அழகு. வாழிய: நெடுங்காலம் பற்றிய சொல் - என்னை?
|
| 2`வாழிய வென்னுஞ் செயவென் கிளவி` |
என்பதனான் உணர்க. ஆவி - வாவி. மின் : ஆகுபெயர். நீத்தல் - பிரிதல். தேர்தல் - பிறந்தகாலத்தை யாராய்ந்தறிதல். |
(391) |
தலைவியுணர்ந்து தலைவனோடு புலத்தல்: |
| வயங்கே ழுலகும் புரக்கின்ற வாணன்தென் மாறையன்ன நயங்கேழ் பெருவள நல்குநல் லூர நயந்துநண்ணி முயங்கேல் சிறுவற் பயந்தவென் மேனியின் முத்துவடம் தயங்கே ரகமுழு தும்பழு தாமது தானினக்கே.
|
(இ-ள்.) விளங்கப்பட்ட ஏழுலகத்தையும் காக்கின்ற வாணன் தென்மாறையன்ன இன்பமும் ஒளியும் பெரிய வளமும் நல்கப் பட்ட நல்லூரையுடையானே, சிறுவனைப் பயந்த என் மேனியை விரும்பிப் பொருந்தி முயங்கற்க; முயங்கில், அதுதான் நினக்கு இன்பமாகிய பரத்தையர் முலைமேல் அணிந்த முத்துவடந் தயங்கப் பட்ட அழகு பொருந்திய நெஞ்சு முழுதும் பழுதாம் என்றவாறு.
|
வயங்கல் - விளங்கல். புரத்தல் - காத்தல். நயம் - இன்பம். கேழ் - ஒளி. தயங்கல் - விளங்கல். ஏர் - அழகு. அகம் - நெஞ்சு. மேனி நயந்து` என இயையும். |
(392) |
|
1. திருமுரு. 228. 2. தொல். எழுத்து. உயிர் மயங்கியல் - 10. |