|
|
தலைவி பாணனை மறுத்தல்: |
| தலையா கியதன்மை யூரற்கு வாணன் தமிழ்த்தஞ்சைசூழ் மலையா கியமதில் வையைநன் னாட்டெங்கை மான்படுக்கும் கலையாகு நின்னிசைக் கண்ணிகொண் டேஎதிர் கன்றுதின்னிப் புலையா கடக்கவெம் மிற்போக போக புறங்கடையே. |
(இ-ள்.) தலைமைத் தன்மையாகிய ஊரற்கு வாணனதுதமிழ்த் தஞ்சையைச் சூழ்ந்த மலையாகிய மதிலையுடைய வையை சூழ்ந்த நல்ல நாட்டின் எங்கையாகிய மானைச் சிக்கவைக்கும் மானுக்கு இனமாகிய கலைபோன்ற நின் இசையாகிய கண்ணிகொண்டு திரியப்பட்ட கன்று தின்னி யென்னும் புலையா, எம் இல்லினின்றுங் கடக்கப் புறங்கடையிற் போக போக என்று கல்லெறிந்தனள் என்றவாறு. |
எங்கை - என் தங்கை. கண்ணி - மான்படுக்குங்கண்ணி. கலை - இசைநூல். `கன்று தின்னி` இகழ்ச்சிப் பெயர். `போக போக` என்பது வெற்பின்கண் வந்த அடுக்கு. மேற்செய்யுளில் கல்லெறிந் தாய் என்று பாணன் தலைவியொடுங் கூறியவாறு. இச்செய்யுளில் `கல்லெறிந்தாய் என்று பாணன் தலைவியொடுங் கூறியவாறு. இச்செய்யுளில் `கல்லெறிந்தனள்` என்பது வருவிக்கப்பட்டது. . |
(393) |
| வாயில் மறுக்கப்பட்ட பாணன் கூறல்: |
வாயில் மறுக்கப்பட்ட பாணன் கூறல் என்பது, கல் எறிந்த தலைவியுடன் பாணன் கூறல். |
| நினக்கே தகுநின் னெடும்புன லூரனு நீயுமவன் தன்கே தகுவை தமிழ்த்தஞ்சை வாணன் தடங்கிரிசூழ் புனக்கே கயமன்ன நின்னடி போற்றிப் புகன்றகன்றும் எனக்கே தகுமிகை யாலெம்பி ராட்டி யெறிந்தகல்லே. |
(இ-ள்.) எம்பிராட்டி! நின்னுடைய கணவனாகிய நெடும்புனலூரனும் நினக்கே தகுவன், நீயும் அவன் றனக்கே தகுவை, யான்செய்த குற்றத்தால் நீ யெறிந்த கல், தமிழ்த் தஞ்சைவாணனது விசாலமாகிய மலைசூழ்ந்த புன்ததிலிருக்கும் மயில்போன்ற நின்னுடைய அடியைத் துதித்துத் தலைவன் வரவைக் கூறிய அதனால் மனங்கன்றும் எனக்கே தகும் என்றவாறு. |
ஏகாரம் மூன்றும் பிரிநிலை: ஆடவரினும் மடவாரிலும் பாணரிலும் பிரித்து வாங்குதலின். தடங்கிரி - பெரியமலை. கேகயம் - மயில். கன்றல் - வெம்புதல். மிகை - குற்றம். |
(394) |